உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டிசேலத்தில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு!
இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கு முன்னதாக துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் எதிர்பார்த்து உள்ளனர்.
திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர் சேலம் மாநகர் கடை வீதியில் உள்ள ராஜகணபதி திருக்கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் 108 தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பேசிய தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நாகா அரவிந்தன், "தமிழகத்தில் எதிர்காலமாக திகழ்ந்துவரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக அறிவிக்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்கப்பட்டால் தமிழகம் தற்போது உள்ள நிலையை விட பல மடங்கு உச்சம் தொடும். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதற்காக சேலம் ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நடத்தினோம்" என்று கூறினார்.
துணை முதல்வர் பதவி:
கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களைப் போலவே பல சீனியர் அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படாமல் உள்ளது.
முதல்வரின் சூசக பதில்:
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வலுத்துள்ளது பழுக்கவில்லை என சூசகமாக பதில் கூறினார். மேலும் இந்த மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதற்கு முன்னதாக துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் எதிர்பார்த்துள்ளனர்.