DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..
தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் அதிமுக மாநாடு நடந்து முடிந்ததுமே, அதைவிட பிரமாண்டமான முறையில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னையில் பெருமழை பெய்தது. இதுதொடர்பான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். இதனால், இளைஞரணி மாநாடு டிசம்பர் 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மாநாட்டிற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டாது. இதனால் தமிழ்நாடு அரசு தரப்பில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வரும் 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கடந்த நவம்பர் 15ம் தேதி உதயநிதி இருசக்கர வாகன பேரணி ஒன்றை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய அந்த பரப்புரையின் மூலம், 188 இருசக்கர வாகனங்களில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகள் மட்டுமின்றி, புதுச்சேரி வழியாகவும் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த பயணத்தில் 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் தூரம் பயணத்து 504 பரப்புரை மையங்கள் மற்றும் 38 தெருமுனை பரப்புரைகள் நடத்தப்பட்டன. பயணத்தின் போது 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக தற்போது சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை அண்ணா சாலை சிம்சனில் இருக்கும் பெரியார் சிலையில் இருந்து காலை 7 மணிக்கு இந்த சுடர் ஓட்டம் தொடங்கப்பட்டது. அண்ணா மேம்பாலம், அறிவாலயம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை ஜனவரி 20 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவர் மு.க ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறார்.