women lineman Worker in tenkasi : தென்காசியில் மின்கம்பப் பணியாளராக பணியாற்றும் 2 பெண்கள்.. அரசுக்கு கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஒப்பந்த பணியாளர்களாக பல வருடங்களாக பணிபுரிந்து வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கலையரசி மற்றும் கலா பார்வதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆண்களுக்கு நிகராக இரு பெண்கள் மின் கம்பத்தில் ஏறி பணிபுரிந்து வருவதை இப்பகுதி மக்கள் சற்று ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி
என்ற எட்டையாபுரம் மகாகவி பாரதியாரின் கவிதைக்கு ஏற்ப அதே மண்ணை சேர்ந்த பெண்கள் இருவர் சங்கரன்கோவில் நகர் பகுதியில் மின் கம்பத்தில் ஏறி பணி புரிந்து வந்தனர். அப்போது அது குறித்து அந்த பெண்களிடம் விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கருங்கல்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி. மூன்று வருடத்திற்கு முன்பு தந்தையை இழந்த இவருக்கு வயது 22. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தாயுடன் தனியாக வசித்து வரும் இவர்களது பொருளாதாரம் முழுக்க முழுக்க கலையரசியை நம்பியே உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்து வந்த கலையரசி உறவினர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி மின்வாரிய துறையில் பணிபுரிய முயற்சித்தார். அப்போது கோவில்பட்டி மின்வாரிய துறையில் லயன் மேன் பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த இருப்பதாக தகவல் அறிந்தவுடன், பெண்களும் மின் கம்பம் ஏரி பணிபுரிய முடியும் என்ற தன்னம்பிக்கையில் கோவில்பட்டி மின்வாரிய துறையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிய தொடங்கினார். தினமும் 350 ரூபாய் சம்பளம் கிடைக்க கூடிய பணி என்பதாலும் குடும்ப வறுமை காரணமாகவும் தற்போது வரை மின்வாரிய துறையில் பணிபுரிந்து வருகிறார்.
கலையரசியின் கதை இப்படி இருக்க, அதே தூத்துக்குடி மாவட்டம் கருங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் கலா பார்வதி. இவரது கதை கலையரசியின் கதையைவிட சற்று சோகமானது தான். கண்ணன் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து பல கனவுகளுடன் வாழ்க்கையை துவங்கிய கலா பார்வதிக்கு மது போதை என்கிற அரக்கன் எமன் ஆகி திருமண வாழ்க்கையை துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதைக்கு அடிமையான கணவனை விட்டு தனியே வந்த கலா பார்வதிக்கு பெற்றோரும் ஆதரவு அளிக்காத நிலையில் தனியாக வாழ்க்கையை வாழத் துவங்கிய இவருக்கு கலையரசி அறிவுரை கூற கலா பார்வதியும் மின்வாரிய துறையில் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிய தொடங்கினார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு மின்வாரிய துறையில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன் பலனாக பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்கள் ஆகவும் தினக்கூலி ஆகவும் பணிபுரிந்து வந்த பல பணியாளர்கள் தமிழ்நாடு அரசு மின்வாரிய துறையில் நிரந்தர பணியாளராக பணியமர்த்தப்பட்டு பலனடைந்தனர். ஆனால் அதன் பிறகு ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வந்த அத்தனை பேரும் இன்றளவும் ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தற்போதைய தமிழ்நாடு அரசு ஒப்பந்த பணியாளர்களாக பல வருடங்களாக பணிபுரிந்து வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கலையரசி மற்றும் கலா பார்வதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேற்கண்ட கலையரசி மற்றும் கலா பார்வதி ஆகிய இருவரும் 3 வருடமாக மின்கம்பம் ஏறும் அளவுக்கு பயிற்சி பெற்று இன்று வரை எவ்வித குறையுமின்றி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிரந்தர பணி ஆணை வழங்கி உதவி புரியும் பட்சத்தில் இதுபோன்று பல பெண்கள் மின்வாரிய துறையில் கோலோச்சி பல சாதனைகளை புரிய இந்த ஆணை வித்திடும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள் போன்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி நாங்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து வரும் சில பெண்களுக்கு மத்தியில் இதுபோன்று அரசு பணி ஆணை கிடைக்குமென்ற தன்னம்பிக்கையுடன் மின்கம்பம் ஏறும் அளவிற்கு துணிச்சல் பெற்ற பெண்கள் தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்
இன்னும் வாழ்க்கையை முழுதாக வாழாத கலையரசிக்கும், குடிக்கு அடிமையான கணவனால் கைவிடப்பட்ட கலா பார்வதிக்கும் தன்னம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்தான் ஒற்றுமை. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இவர்கள் இருவருக்கும் நிரந்தர பணி ஆணை வழங்கி உதவுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
-செய்தியாளர் குமரன் உலகநாத்.