Pending Bills: ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 13 மசோதாக்கள்..தவறான தகவலை தெரிவித்தாரா ஆளுநர் ஆர்.என். ரவி..? உண்மை என்ன..?
ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என மாநில அரசுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் கூறியது என்ன..?
கடந்த மே மாதம் 4ஆம் தேதி, ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "ஆளுநரிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. பல்கலைக்கழகங்கள் தொடர்பான எட்டு மசோதாக்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆனால், அதே தினம், ஆளுநருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 17 மசோதாக்கள் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் இருக்கிறது. நிலுவையில் வைத்திருப்பதற்கும் நிறுத்தி வைத்திருப்பதற்கும் வேறுபாடு என்ன என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்" என்றார்.
ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறியதும், 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசும் கூறியதும் பெரும் நிர்வாக சிக்கலை உருவாக்கியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்த உண்மை:
இந்நிலையில், இது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜூன் 15ஆம் தேதி தமிழ்நாடு சட்டத்துறை பதில் அளித்துள்ளது. அதில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றிய 2 மசோதாக்கள் உள்பட 13 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது" என தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலதத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகம் திருத்த மசோதா 2020, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா 2020 ஆகியவை ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்தார். ஆனால், அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சட்டத்துறை பதில் அளித்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்ட 17 மசோதாக்களில் 5 மசோதாக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு சட்டத்துறை ஆர்டிஐ மூலம் கூறியுள்ளது.
எனவே, இந்தாண்டு மே 22ஆம் தேதி வரையில், மேல்குறிப்பிடப்பட்ட 2 மசோதாக்கள் உள்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 13 மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக சட்டத்துறையின் பொது தகவல் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
ஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை வேந்தருக்கு (ஆளுநர்) பதில் மாநில அரசிடம் அளிக்க தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழகம் திருத்த மசோதா வழிவகை செய்கிறது. அதேபோல, ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை வேந்தருக்கு (ஆளுநர்) பதில் மாநில அரசிடம் அளிக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.