TVK Vijay: விரைவில் சுற்றுப்பயணம்? சர்க்கார் அமைக்க விஜய் போடும் மாஸ்டர் ப்ளான் - ஓர் அலசல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் விரைவில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அமைதியாக இருந்தவர் விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு தனது அரசியல் பயணத்தை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளார்.
விரைவில் விஜய் சுற்றுப்பயணம்?
விஜய்யின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் விஜய். தி.மு.க. அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நாயகனாக உருவெடுக்க விஜய் முதல் முயற்சியை எடுத்துள்ளார்.
நாயக அரிதாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாடாள முடியாது என்பதை உணர்ந்து கொண்டது போல, விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் விஜய் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
தங்கள் வீட்டில் உள்ள ஒருவர் போல இருக்கிறார் என்ற ஒற்றை விஷயமே கோடிக்கணக்கான ரசிகர்களை விஜய்க்கு என்று உருவாக்கியது. கோடிக்கணக்கான ரசிகர்களை கோடிக்கணக்கான ஓட்டுகளாக மாற்ற வேண்டும் என்றால் அவர்களுடன் அவர்களாக மாற வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். அதற்கு அவர் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்க வேண்டியது அவசியம் ஆகும். அதற்காகவே விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப்பயணம் என்பது எப்போதும் அரசியலிலும், ஆட்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே கடந்த கால வரலாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகு, விஜயகாந்தின் தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நலக்குறைவால் மு.க.ஸ்டாலினின் பெரும்பாலான பங்களிப்பிலே தி.மு.க. சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது.
கடந்த கால வரலாறு:
அந்த தேர்தலில் தி.மு.க. பெருவாரியான இடங்களை பெற்று மீண்டும் எதிர்க்கட்சி பலத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணம் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணமே ஆகும். தி.மு.க. அந்த தேர்தலில் 89 இடங்களை பெற்றது. 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் 66 தொகுதிகள் அதிகம் பெற்றதற்கு முக்கிய காரணமே மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம் ஆகும். அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது விமர்சித்தவர்களே அந்த சுற்றுப்பயணம் முடியும்போது வியப்படைந்தனர். கருணாநிதிக்கு நிகரான ஒரு புகழை அந்தச் சுற்றுப்பயணம் மு.க.ஸ்டாலினுக்குப் பெற்றுத் தந்தது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சுற்றுப்பயணம் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 2014ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம் ஆட்சியை சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து பறித்து ஜெகன்மோகனிடம் கொடுத்தது. அந்த சுற்றுப்பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால் 2019ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேசிய அளவில் ராகுல் காந்தி மேற்கொண்டு சுற்றுப்பயணம் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நல்ல பயனை அளித்தது. பா.ஜ.க.வை தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க விடாமல் செய்ததில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது.
வெற்றியைத் தருமா அஸ்திரம்?
தமிழ்நாட்டு அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு அரசியல் சுற்றுப்பயணங்களுக்கு உண்டு. நடிகர் விஜய்யும் அதே ரூட்டை தற்போது கையில் எடுத்துள்ளார். பா.ஜ.க.வும், தி.மு.க.வும்தான் தங்கள் எதிரி என்று கூறியிருக்கும் விஜய்க்கு இந்த அரசியல் சுற்றுப்பயணம் என்ற அஸ்திரம் அவருக்கு வெற்றியை பரிசாக தருமா? என்பதற்கு 2026 சட்டமன்ற தேர்தல் முடிவே பதில் தரும்.