
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
தமிழக மக்களுக்கு த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்வது ஆயுத பூஜை. செய்யும் தொழிலை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை மதங்களை கடந்து அனைவரும் கொண்டாடுவது வழக்கம். ஆயுத பூஜையை முன்னிட்டு தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
ஆயுத பூஜை வாழ்த்து கூறிய விஜய்:
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் ஆயுதபூஜை. சரஸ்வதி பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கம் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) October 11, 2024
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இதுவரை த.வெ.க.வின் கொள்கை என்னவென்று இதுவரை கூறவில்லை.
விநாயகர் சதுர்த்தி சர்ச்சை:
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலே அவர் தனது கொள்கையை மக்கள் மத்தியில் கூற உள்ளார். தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் என பல கொள்கைகள் தமிழ்நாட்டின் அரசியலில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் விஜய் எதை சார்ந்து இயங்கப் போகிறார்? என்பது பெரும் கேள்விக்குறியாக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் கடந்த மாதம் வந்த விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வாழ்த்து கூறவில்லை. இது பேசுபொருளாக மாறியது. பெரியாரின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று பெரியாரின் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்திய விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை என்று கூறி சிலர் விமர்சித்தனர்.
இரு வாரத்தில் அரசியல் மாநாடு:
இந்த சூழலில், இன்று விஜய் பொதுமக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியிருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் இந்த வாழ்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள விஜய் அதேசமயம் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

