(Source: ECI/ABP News/ABP Majha)
தரவரிசையில் முதலிடம்; மருத்துவர் கனவுகளுடன் முதல்வரின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவர்..!
2020-ஆம் ஆண்டு முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மாணவர் சந்திரன் இப்பிரச்சனைகளை நேரில் சென்று எடுத்துரைத்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதோடு தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்று கால்நடை மருத்துவர் படிப்பினைப் படிக்க நினைத்தப் பழங்குடியின மாணவர், இட ஒதுக்கீட்டில் ஏற்பட்டப் பிரச்சனையால் கால்நடைகளை வளர்த்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் கனவுகளை நெஞ்சில் புதைத்து குடும்பச் சூழலுக்காக பணியாற்றி வரும் சந்திரனின் வாழ்க்கை சிறு வயதில் இருந்தே துயரங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதல்ல. தாங்கள் வசிக்கும் பகுதியில் எந்த முறையான சாலை இல்லாமை, சில இடங்களில் மின்சாரம் கூட இல்லாத நிலை தான் உள்ளது. அப்படிப்பட்ட சூழலிலும் படிக்க வேண்டும் என்ற கனவு பலரிடம் காணப்படுகிறது. ஆனால் சமூகம் அவர்களுக்கு எந்த வழியினையும் கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சன உண்மை. இப்படிப்பட்ட கிராமத்தில் வசித்த பழங்குடியின மாணவர் பலப்போராட்டங்களுக்குப்பிறகு பள்ளிப்படிப்பினை மேற்கொண்டதோடு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் என்ன பிரோஜனம்? அவர் நினைத்தப் படிப்பினை படிக்கமுடியாமல் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்து விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில்தான் ஈடுபட்டுவருகிறார். எப்பொழுது பிரச்சனைத் தீருமோ? என்ற நிலையில் இருக்கும் இவர்கள் கடந்து பாதையினை தற்பொழுது நினைவுக்கூர்வோம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த பர்கூர் மலைப்பகுதியினைச்சேர்ந்தது சுண்டைப்போடு கிராமம். இக்கிராமத்தினைச்சேர்ந்த உடுமுட்டி- பசுவி தம்பியினருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். சோளகர் எனும் பழங்குடியின இனத்தினைச் சேர்ந்த இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் மேற்கொண்டும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தும் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இவர்களுடைய 5 ஆவது மகனான உ. சந்திரன் என்பவரை குடும்பச்சூழல் குழந்தைத்தொழிலாளர் நிலைக்கு தள்ளியது. இந்நிலையில் தான் அப்பகுதியில் பணிபுரிந்த குழந்தைகள் நல அமைப்பின் மூலம் அவருடைய 6 வது வயதில் குழந்தைத் தொழிலாளர் என்ற நிலையில் இருந்து மீட்கப்பட்டார். பின்னர் தேசிய குழந்தைத் தொழிலாளர் நலத்திட்டத்தின் கீழ், கொங்கடையில் நடத்தப்படும் சிறப்புப்பள்ளியில் சேர்ந்து படித்த சந்திரன், பின்னர் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் vocation group ல் படித்தார். மேலும் இவர் 600க்கு 444 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
தன்னுடைய குடும்பத்தில் முதன் முதலில் பள்ளிப்படிப்பினை முடித்தவர் என்ற பெருமைக்குரியவராய் இருந்தார். அதன்பின், இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் 2019-ல் விண்ணப்பித்துள்ளார். மேலும் இவருடைய மதிப்பெண்களைக் கணக்கிடுகையில், பல்கலைக்கழக தரவரிசையில் முதல் இடத்தினைப் பெற்றவராக விளங்கினார். இந்நிலையில் தான் எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து நல்ல வேலைக்குச்சென்று குடும்பத்தினரைக் காப்பாற்றிவிடுவோம் என்ற கனவில் இருந்தப்பொழுதுதான், கல்லூரி கலந்தாய்விற்கான எந்தவிதக் கடிதமும் அவருக்கு கிடைக்கப்பெறவில்லை.
ஏன் என்று தெரியாமல் திகைத்து நின்ற பொழுது இப்பிரச்சனைக்குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாக என சந்திரசேகரின் கல்விக்கு உதவிய சுடர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தெரிவித்தார். குடும்பச் சூழலிலும் கஷ்டப்பட்டு படித்த இவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றதோடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் முதல் இடத்தினைப்பெற்றிருந்தார்.
ஊரே அவரைக்கொண்டாடியது. ஆனால் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு கடிதம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து தான் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பழங்குடியின மாணவருக்கு ஒரு இடமாக ஒதுக்குங்கள் எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் சந்திரனின் மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் 360 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும், இதில் 54 இடங்களுக்கு புது தில்லியில் உள்ள அகில இந்திய கால்நடைப்பல்கலைக்கழகத்தில் தேர்வு செய்து அனுப்புவார்கள். மீதமுள்ள 306 இடங்களில் 5 சதவீதம் அதாவது 18 இடங்கள் மட்டுமே பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நடைமுறை உள்ளதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்து சந்திரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பிறகும் தன் படிப்பினைத்தொடங்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமும் இப்பிரச்சனைக் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித பலனும் இல்லை. இந்தப்பிரச்சனை இந்த சந்திரன் என்ற ஒரு மாணவனுக்கு மட்மில்லை. இவரைப்போன்று உள்ள அனைத்துப் பழங்குடி மாணவர்களுக்கும் இதே நிலை தான் எனவும் எப்பொழுது இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்பது புரியாத புதிர்தான் என்று வேதனையடைகின்றனர் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்திற்காக உதவு செய்யக்கூடிய தன்னார்வ அமைப்புகள்.
இந்த சூழலில் தான் தன்னுடையக் கனவுகளை எல்லாம் மனதில் புதைத்துக்கொண்டு, குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும், தங்களிடம் உள்ள நிலத்தில் என்ன விளைகிறதோ? அதனைச் சாப்பிட்டு நாங்கள் வாழ்க்கையினை நடத்துகிறோம் என சோகக்குரலில் தன் கருத்துக்களை தெரிவிக்கிறார் சந்திரன். மேலும் இது என்னுடைய கனவு இல்லை எனவும், குடும்பத்திற்காக இப்பொழுது இந்தப்பணிகளை மேற்கொள்கிறேன் என வேதனையுடன் தெரிவிக்கும் பழங்குடியின மாணவர் சந்திரன், எங்கள் நிலத்தில் என்ன விளைவிக்கிறோமோ? அது தான் எங்களுக்குச் சாப்பாடு. இந்த நிலையினை எல்லாம் மாற்றவேண்டும் என்று விடா முயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன். இதனையடுத்து நல்ல கல்லூரியில் படித்து நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தினைக் காப்பாற்றுவேன் என நினைத்தேன். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. குடும்பத்தேவைகளை நிவர்த்தி செய்யவே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என வேதனையுடன் பகிர்கிறார்.
இதற்கிடையில் தான் ஈரோட்டிற்கு வந்திருந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம், பழங்குடியின மாணவர் தன்னுடையப் பிரச்சனைகளையெல்லாம் குறித்து மனு ஒன்றினை வழங்கினார். இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு இடம் ஒதுக்கீடுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுக்குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளார். ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தப்பொழுது மாணவர் சந்திரன் இப்பிரச்சனைகளைக்குறித்து நேரில் சென்று எடுத்துரைத்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே பழங்குடியின மாணவரின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் உரிய நடவடிக்கையினை எடுப்பார் என பழங்குடியின மாணவர் சந்திரன் மற்றும் அவருடைய பெற்றோர்கள் மட்டுமில்லை அனைவரும் ஆவலோடு காத்திருப்போம்.!..