தூத்துக்குடியில் நாளை முதல் ரயில்கள் இயங்கும்! திருச்செந்தூரில் ஒரு வாரத்தில் சேவை தொடங்கும்- தெற்கு ரயில்வே
தூத்துக்குடியில் நாளை முதல் ரயில்கள் இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள் முடங்கின. இந்நிலையில் இம்மாவட்டங்களில் பேருந்து சேவைகள் தொடங்கிய நிலையில், தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் திருச்செந்தூரில் ஒரு வாரத்தில் ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்ததால், சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து தண்ணீர் தேங்கி நின்றது.
கன மழை பெய்ததால், தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுபாதை சுற்றிலும் மழை நீர் தேங்கியது. இதனால் சென்னை- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தூத்துக்குடியில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ள நீர் அகற்றப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் விமான போக்குவரத்து தொடங்கியது. தூத்துக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர் அகற்றப்பட்ட நிலையில் நாளை முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அவர் குறிஞ்சி நகர் டவர் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெள்ள பாதிப்பு குறித்தும், சேதங்கள் குறித்தும் பொதுமக்கள் மீட்கப்பட்டது குறித்தும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் லட்சுமிபதி, மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட்டோர் முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளத்தில் சிக்கி உள்ள மற்றவர்களையும் உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க
5 Face Rudraksha: ஐந்து முக ருத்ராட்சம் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? முழு விவரம் இங்கே!