அண்ணாமலைக்கு அவசர நெருக்கடி: முதலமைச்சரை தொடர்ந்து திமுக எம்.பி. டிஆர் பாலுவும் அட்டாக்...!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
![அண்ணாமலைக்கு அவசர நெருக்கடி: முதலமைச்சரை தொடர்ந்து திமுக எம்.பி. டிஆர் பாலுவும் அட்டாக்...! TR Balu files defamation case against BJP Chief Annamalai அண்ணாமலைக்கு அவசர நெருக்கடி: முதலமைச்சரை தொடர்ந்து திமுக எம்.பி. டிஆர் பாலுவும் அட்டாக்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/a72aed66d68bcf9926c66892f04504ed1683953210547109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர், சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சொத்துப் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை
தி.மு.க. அரசின் அமைச்சர்களின் சொத்து பட்டியலை தி.மு.க.பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.
அண்ணாமலையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தன் மீது அவதூறு பரப்பியதாக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சார்பில் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அண்ணாமலை 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அண்ணாமலை தரப்பில் இருந்து திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. ஆர்.எஸ்.பாரதி கேட்ட ரூ.500 கோடியை வழங்க முடியாது. ஏனெனில், இழப்பீடு தரும்படி சட்டத்திலும் இடமில்லை என்று பதில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் மன்னிப்பு கேட்க கோரியும், ரூ, 500 கோடி இழப்பீடு கேட்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை தரப்பில் இருந்து பதில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கடந்த 10-ம் தேதி கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை அண்ணாமலை கூறியதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
டிஆர் பாலு மனுவின் விவரம் வருமாறு:
1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.
எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையில், திமுக அமைச்சர்கள் 21 பேரின் ஊழல் பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)