Kutralam Falls: வலுக்கும் வடகிழக்கு பருவமழை.. குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவது குற்றாலம். ஆண்டுதோறு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் குற்றால சீசன் தொடங்கும். இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். உற்சாகத்துடன் மக்கள் குற்றாளத்தில் இருக்கும் அருவிகளில் குளித்து செல்வார்கள். மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, ஐந்தருவி, செண்பக அருவி ஆகியவை முக்கிய அருவிகளாகும். இங்குள்ள அருவிகளில் வரும் தண்ணீர் பொதிகை மலையில் இருக்கும் பல்வேறு மூலிகை செடிகளை கடந்து வருவதால், தண்ணீர் மூலிகை குணங்கள் நிறைந்தது என நம்பப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீசன் களைக்கட்டி திரளான மக்கள் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனை அடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அருவிகளில் நீர் வரத்து சீரான பின் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து குற்றாலம் செல்ல விரும்புவோர் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் போன்றவை தினசரி ரயில்களாக இயக்கப்படுகின்றன. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்று ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் நாளையும், நாளை மறுதினமும் தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் 4 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும், 5 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.