Hogenakkal: ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி; பரிசல் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
காவிரி நீர்பிடிப்புகளில் மழை குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 9,000 கன அடியிலிருந்து 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
கோடை மழை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த வாரம் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தொடர்ந்து 7,000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்து வந்ததால், மேலும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 7,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும், காவிரி ஆறு மற்றும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
நீர்வரத்து குறைவு:
இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 9000 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து, வினாடிக்கு 9,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக குறைந்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி:
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல்லில் மெயினருவி, ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால், கடந்த 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தருமபுரி மாவட்ட நிர்வாகம் விலக்கியது. இதனால் 3-நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் காவிரி ஆறு மற்றும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தொழிலாளர்கள் மகிழ்ச்சி:
பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால், சுற்றுலா பயணிகளும், சுற்றுலாவை நம்பியுள்ள மசாஜ், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நாட்களில், திடீரென பெய்த கோடை மழையால், நீர்வரத்து அதிகரித்ததால், தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர். தற்போது மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இன்று ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் சென்று மகிழ்ந்தனர். மேலும் ஒகேனக்கல், ஆலம்பாடி, ஊட்டமலை, போன்ற காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்