Diwali Rain: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்! எங்கு கனமழை பெய்யும்?
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில், அடுத்த 7 நாட்கள் தமிழ்நாட்டில் கனமழை வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாளை 18ம் தேதி, தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்திவு பகுதிகளில் கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அடுத்த 7 நாட்கள் எப்படி?
நாளை தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை அபாயம்:
வரும் 20ம் தேதி தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 21ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
நாளை மறுநாள் தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாலுமுக்கு பகுதியில் 16 செ.மீட்டர் மழையும், ஊத்து 15 செ.மீட்டர் மழையும், காக்காச்சி பகுதியில் 14 செ.மீட்டர் மழையும், மாஞ்சோலியில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பாதிக்கும் தீபாவளி விற்பனையும், கொண்டாட்டமும்:

மழையின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் தீபாவளி பண்டிகைக்கு ஆர்வத்துடன் பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள், சிறுமிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதிலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தொய்வு ஏற்பட்டுள்ளது.





















