TN Weather Update: மக்களே உஷார்... நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...! முழு நிலவரம் உள்ளே..!
கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் இந்தப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு,புதுச்சேரியில் மார்ச் 14, 15, 16 ஆகிய நாள்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்
வரும் 14,15 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக 14.03.2023 - 15.03.2023: தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
16.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோட்டில் அதிகபட்சமாக 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறும் வானிலை:
முன்னதாக தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்தது முதல் கடந்த சில மாதங்களாக கடும் பனி பொழியத் தொடங்கியது. காற்று வீசும் திசை மாறுபாடு காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சென்ற மாதங்களில் சென்னையில் அதிகாலை வேளைகளில் கடும்பனி மூட்டம் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில், சென்னை மக்கள், சென்னை ஸ்நோ போன்ற ஹேஷ்டேக்குகளில் ட்விட்டரில் புலம்பும் அளவுக்கு பனியின் உக்கிரம் அதிகரித்தது.
நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டத்தால் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகளை வாகன ஓட்டிகள் உபயோகிக்க அவர்களது இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மேலும் இன்னும் சில நாள்களில் பங்குனி மாதம் தொடங்க உள்ள நிலையில் மக்கள் ஏற்கெனவே வெயிலின் உக்கிரத்தை நினைத்து வருந்தத் தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படும் நிலையில், மழையை எதிர்பார்த்து மக்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில் தென் தமிழக மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மேலும் படிக்க: Oscars 2023: இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கிறதா? எந்தெந்த பிரிவில் என்னென்ன படங்கள் வெல்லும்? - கணிப்புகள் சொல்வது இதுதான்...!