Ramadoss: சுங்கக் கட்டண உயர்வின் விளைவுகளை தாங்கமுடியாது; கைவிடுக- ராமதாஸ் வலியுறுத்தல்
சுங்கக் கட்டண உயர்வின் விளைவுகளைத் தாங்க முடியாது என்றும் உடனே கைவிட்டு, சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சுங்கக் கட்டண உயர்வின் விளைவுகளைத் தாங்க முடியாது என்றும் உடனே கைவிட்டு, சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
’’தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் 10% வரை உயர்த்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வருவாய் குறைவு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதன் விளைவுகளை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. சுங்கக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.85 வரை இருக்கும் என்று தெரிகிறது. இது நியாயமற்றதாகும்.
மறைமுகமாக மற்ற பொருட்கள் விலை உயரும்
சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏற்ற சூழல் இப்போது இல்லை. கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24 ஆகவும் உள்ளது. இதனால் ஊர்திகளை இயக்குவது மிகவும் அதிக செலவாகும் ஒன்றாக மாறியிருக்கிறது. இத்தகைய சூழலில் சுங்கக்கட்டணமும் தாங்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டால் அதை ஊர்தி உரிமையாளர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டால் அதைத் தொடர்ந்து சரக்குந்து, மகிழுந்து, மூடுந்து உள்ளிட்ட ஊர்திகளின் வாடகை உயர்த்தப்படும். அது மறைமுகமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட இன்றியமையாதப் பொருட்களின் மீதும், சேவைகள் மீதும் சுமத்தப்படும். அவற்றின் பாதிப்புகளை பொதுமக்கள்தான் தாங்க வேண்டும்; ஆனால், அது மக்களால் இயலாதது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,‘‘நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப் படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்’’ என்று அறிவித்தார். ஆனால், அதன்பின் ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.
சுங்கக்கட்டணத்தை ரத்து செய்க
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதி நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் இப்போதுள்ள 59 சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 16 அல்லது 17 ஆக குறைந்துவிடும். மீதமுள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டிய நிலை உருவாகும். அதுமட்டுமின்றி செங்கல்பட்டு பரனூர் உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. அவற்றிற்காக செய்யப்பட்ட முதலீடு வட்டியுடன் எடுக்கப்பட்டிருக்கும் என்பதால், அவற்றில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து விட்டு, பராமரிப்பு செலவுகளுக்காக 40% கட்டணம் மட்டுமே தண்டல் செய்ய வேண்டியிருக்கும்.
மக்களின் நலனைக் கருத்தில், அவர்களுக்கு பயனளிக்க வேண்டிய சீர்திருத்தங்களை செய்யாமல், சுங்கக்கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும். அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் 60 கிமீக்கு ஒரு சுங்கச் சாவடி என்ற அளவில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணத்தை மட்டுமே தண்டல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.