SMC: கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் கட்டாயம்: முக்கிய அறிவுறுத்தல்கள் என்ன?
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் (26.01.2023) கூட்டப்பொருளாக இணைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் (26.01.2023) கூட்டப்பொருளாக இணைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஏப்ரல், ஜூலை மாதங்களில் நடைபெற்று,பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், புதிய உறுப்பினர்களைக் கொண்டு, மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து நிலைக் குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக் குழுவில் பள்ளி வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே, கிராம சபை கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் தொடர்பான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்துகொள்வது அவசியம்.
எனவே ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும். இதுதொடர்பாக கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல், உட்கட்டமைப்பு போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.
பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் தங்கள் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை முறைப்படி தொகுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல் கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை முறைப்படி தொகுத்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனைகளுக்காக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் இத்தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
கிராம சபைக் கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். மேலும் கிராமப் பஞ்சாயத்துகள் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.
கிராம சபை கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை, முடிவுகளை அடுத்த மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பகிர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் கிராம சபை கூட்டத்திலும் பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேற்காணும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட தீர்மானங்கள் சார்ந்து கிராம சபை கூட்டத்தில் முக்கிய கூட்டப்பொருளில் ஒன்றாக இணைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.