P.Chidambaram: மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு !
தமிழ்நாட்டு மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள 6 மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3ல் திமுக கட்சி போட்டியிடுகிறது. திமுக தன்னுடைய கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த இடத்திற்கான வேட்பாளர் யார் என்பதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்துள்ளதாக கூறப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட திரு @PChidambaram_IN அவர்கள் பெயர் அறிவிப்பு. https://t.co/FX9CUEL8QA
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 29, 2022
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள். ஆகவே நாளை காலை அவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கருதப்படுகிறது.
தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மற்றும் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் சி.வி. சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது விசா முறைகேடு வழக்கு நடைபெற்று வருவதும், அவர் தற்போது டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலங்களுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வரும் மே 31-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்