School Leave: கொட்டித் தீர்க்கும் மழை! நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களுக்கும், வால்பாறையிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமான கூடலூரில் மழைநீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்துள்ளதால் போக்குவரத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவதி:
மழையில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். மாயாற்றில் தொடர்ந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருவதால் அதிகாரிகள் கரையோரம் உள்ள மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலே அதிகபட்சமாக அவலாஞ்சியில் மழை கொட்டித் தீர்த்ததால் அந்த பகுதியில் விளைநிலங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியது. அவலாஞ்சியில் மட்டும் நேற்று 34 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
மாயாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மசினகுடி - கூடலூர் இடையே வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.