Chennai Rains: சென்னையில் பலத்த காற்றுடன் மழை... அடுத்த 3 மணி நேரமும் இப்படிதான் இருக்குமாம்! வானிலை மையம் அலர்ட்!
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
Chennai Rain: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை கொடுத்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை.
ஆனால், கடந்த ஒரு வாரம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தான் நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. பல இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. நேற்று இரவு மழை தொடங்கிய நிலையில், இன்று காலை வரை ஓயாமல் சாரல் மழையாகப் பொழிந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து தகவல்களை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
13 மாவட்டங்கள்:
அதன்படி தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
23.07.2023 மற்றும் 24.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.07.2023 மற்றும் 26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.07.2023 முதல் 29.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.