Arun Roy IAS : ’கிருஷ்ணனுக்கு பதில் அருண்ராய் ஐ.ஏ.எஸ்’ புதிய தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னணி..!
'அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் அருண் ராய் ஐ.ஏ.எஸ்’
வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தவிருந்த நிலையில் தொழில்துறை செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருஷ்ணன், மத்திய அரசு பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். மத்திய அரசு பணிக்கு செல்ல அவர் விருப்பம் தெரிவித்திருந்ததன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தாலும் அவருக்கும் தலைமைச் செயலாளருமான சிவ்தாஸ் மீனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த முடிவுவை கிருஷ்ணன் எடுத்ததாக கூறப்பட்டது.
ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு
இன்னும் 4 மாதங்களில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த பணிகளை ஒருங்கிணைத்து வந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றலாகி சென்றதும் எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை, தமிழக அரசு தொழில்துறை செயலாளராக நியமிக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், துடிப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் ராயை தொழில்துறை செயலாளராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 2வது முறையாக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒருங்கிணைக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் அருண்ராய் ஐ.ஏ.எஸ். இந்த முறையும் அவர் உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த அருண்ராய் ஐ.ஏ.ஸ் வசம் இப்போது ஒட்டுமொத்த தொழில்துறையே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
டி.ஆர்.பி. ராஜவுக்கு ஈடு கொடுக்கும் துடிப்பான அதிகாரி
முதன் முறையாக அமைச்சர் ஆகியிருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு மிக முக்கியமான தொழில்துறை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து பணியாற்றவும் முதலீட்டாளர் மாநாடு குறித்த அனுபவமும் கொண்ட அருண் ராய் ஐ.ஏ.எஸ்-ஐ தொழில்துறை செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளதன் மூலம் இந்த மாநாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டதைவிட பிரம்மாண்டமாக நடத்தி, அதிக அளவிலான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து காட்டிவிட வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது.
கல்லூரி டாப்பரான அருண்ராய்
தற்போது தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அருண் ராய் ஐ.ஏ.எஸ், கேரள மாநிலத்தில் உள்ள சின்னஞ்சிறிய நகரமான திருவல்லாவில் பேராசிரியர் தம்பதிக்கு பிறந்தவர். ஆசிரியர் புள்ள மக்கு, மருத்துவர் புள்ள சீக்கு என்ற சொல்வடையை மாற்றி பள்ளி படிப்பிலும் கல்லூரியிலும் சிறந்த மாணவர் என்ற பெயரை வாங்கியவர் அருண் ராய். பெங்களூரில் உள்ள தேசிய சட்ட கல்லூரியில் பயின்ற ’டாப்பரான’ அருண் ராய்க்கு, தான் ஒரு வழக்கறிஞர் ஆவதை விட மக்களுக்கு சேவை செய்யும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்ற எண்ணம் அவரது பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் தோன்றியது. உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’ என்பதற்கிணங்க, எண்ணம் தோன்றிய அந்த கனமே அவர் செயலில் இறங்கினார். பரீட்சை எழுதினார். ஐ.ஏ.எஸ் ஆனார்.
ஐ.ஏ.எஸ் ஆன சட்டப்புலி
தனக்கு கணக்குகள் சரியாக வராது என்ற காரணத்தால் சட்டப்படிப்பை தேர்வு செய்த அருண் ராய் 2003ல் ஐ.ஏ.எஸ் ஆனார். பின்னர், அவர் ஆறு ஆண்டுகள் கணக்குகளையும் எண்களையும் கணிக்க வேண்டிய தமிழக அரசின் நிதித்துறையில் பணியமர்த்தப்பட்டார். அங்கே மட்டுமல்ல அவர் இதுவரை பணியாற்றிய அத்தனை இடங்களிலும் சிறப்பாக பணியாற்றி சிக்சர் அடித்திருக்கிறார் என்பதுதான் அவரின் இதுவரையிலான ட்ராக் ரெக்கார்ட்.
களத்தில் ‘இறங்கி’ வேலை பார்ப்பவர்
சமூக நீதி, சமத்துவம் என்பதில் மிகுந்த நம்பிக்கைக் கொண்ட அருண்ராய் ஐ.ஏ.எஸ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தனக்கு பேக்ஸ்சில் வந்த ஒரு கடிதத்தை கண்டு அதிர்ந்தார். அந்த மாவட்டத்தில் சின்னஞ்சிறிய சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்த அழைப்பிதல் அது. ஆட்சியர்தானே மற்ற அதிகாரிகளிடம் சொல்லி விசாரிக்கச் சொல்வோம் என்று மெத்தமாக விட்டுவிடவில்லை அவர். தானே நேரடியாக களத்தில் இறங்கி அந்த திருமணத்தை நிறுத்தினார். அதோடு, அந்த மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சமூக அமைப்புகளின் பாராட்டையும் பெற்றார்.
சுனாமியில் உதவியவர் ; சுனாமி என செயல்படுபவர்
தனது வயதான பெற்றோரிடமிருந்து நிலத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டிவிட்ட மகனிடம் இருந்து, அவர்களின் நிலத்தை மீட்டு ஒப்படைத்தவர் அருண்ராய். அதற்காக அவர் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007ஐ பயன்படுத்தினார். பின்னர், அந்த நடவடிக்கையை உயர்நீதிமன்றமே உறுதி செய்தது.
2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவுவதற்காக அருண் ராயை தமிழக அரசு அங்கு அனுப்பி வைத்தது. அப்போது தனது துரிதமான நடவடிக்கையால் மக்களின் பாராட்டை பெற்றார் அவர். என்.ஜி.ஓக்களிடமிருந்து உணவு உள்ளிட்ட உதவிகளை பெற்று அதனை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுசேர்த்து அவர்கள் துயர்துடைக்கும் பெரும் பொறுப்பு அவரிடம் அப்போது ஒப்படைக்கப்பட்டது. அதை சிறப்பாக செய்த அருண்ராய், பாதிக்கப்பட்டவர்கள் இளைப்பாறவும் அவர்கள் பசியை போக்கவும் எடுத்த முயற்சிகள் தனக்கு மன நிறைவை அளிப்பதாக சொல்லியிருக்கிறார்.
தாகம் தீர்த்த நிர்வாகி
சிதம்பரத்தின் சார் ஆட்சியராக அருண்ராய் நியமிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு கட்டித் தருவது போன்ற நீண்ட கால நிவாரணங்களில் அவர் கவனம் செலுத்தி செயல்பட்டார். சென்னை மெட்ரோ நீர் மற்றும் கழிவு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக அருண்ராய் இருந்தபோது, பெரிய அளவிலான வறட்சியை சென்னை சந்திக்கும் நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ளச்செய்தார். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று முன்கூட்டியே கணித்து, கைவிடப்பட்ட ஆழ்துளாய் கிணறுகள், நீர் ஆதாரங்களை தேடி அங்கிருந்து சுத்தகரித்த நீரை சென்னை கொண்டுவரும் திட்டத்தை வடிவமைத்தார். அதோடு, போரூர் ஏரியில் தினமும் நான்கு மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்தகரிக்கும் புதுமையான முறையை அறிமுகம் செய்து அதன் மூலம் சென்னை நகர வாசிகளின் தாகத்தை தீர்த்தவர் அருண் ராய் ஐ.ஏ.ஸ்.
நம்பிக்கை வைத்த தமிழக அரசு
இப்படி தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெயர் அவருக்கு இருப்பதாலும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டதுபோல இந்த முறையும் அவரை சிறப்பு அதிகாரியாக நியமித்த தமிழக அரசு, இப்போது அவர் மீது நம்பிக்கை வைத்து, அருண் ராயை தொழில்துறை செயலாளராக நியமித்துள்ளது.