Governor RN Ravi: நேற்று நாட்டியாஞ்சலி விழா... இன்று சிதம்பரம் கோயிலில் வழிபாடு.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் சிதம்பரம் விசிட்..!
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோயிலில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சிதம்பரத்தில் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியையொட்டி முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தெற்கு வீதியில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கிய இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
இதற்காக நேற்று நண்பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மாலை 4.30 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு வருகை தந்தார். அவரை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜாராம், உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி , தில்லை நடராஜர் ஆதிகடவுளும், முதன்மையான கடவுளும் ஆவார் என்பது நம் அனைவருக்குமே தெரியும் என குறிப்பிட்டார். நம் நாட்டில் சனாதன தர்மம் தோன்றி பலவிதமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது. நாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் ஒன்றாக பார்க்கும் பிரதமரை பெற்றுள்ளோம்.
நம் நாடு உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. திருக்குறள், திருமுறைகளை நமது குழந்தைகள் படிக்க வேண்டும். அதேபோல் நாட்டியம் என்பது இறைவனை அடைய, தொடர்புக் கொள்ளக்கூடிய ஊடகமாக விளங்கியது. ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி செய்வதால் அந்த குழுவினர் மிக உன்னத நிலையை அடைகின்றனர். இது பாராட்டத்தக்கது என சொன்னார்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் அமர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல், நாட்டிய கலைஞர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கினார். இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். இன்று காலை 12 மணியளவில் புதுச்சேரியில் இருந்து கிளம்பும் அவர் மதியம் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.