செய்தியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! - முதலமைச்சர் அறிவிப்பு
புதிய தலைமுறை , நியூஸ் 7, சத்யம், கேப்டன், என்.டி.டி.வி, டைம்ஸ் நவ், மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
கடந்த அதிமுக ஆட்சிகளில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஊடகங்கள் மீது இதுவரைப் பதியப்பட்ட சுமார் 90 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த அரசு செய்திக் குறிப்பில்
’2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர். பேட்டியளித்தவர் ஆகியோர் வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆசிரியர். அச்சிட்டவர், ஊடகங்களின் மீது சுமார் 90 செய்தி அவதூறு அவற்றுள் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், 'எக்கனாமிக்ஸ் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், 'ஜூனியர் விகடன்' இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும் நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், 'முரசொலி' நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழ் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன
மேலும், 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி, 'நியூஸ் 7’ தொலைக்காட்சி, 'சத்யம்' தொலைக்காட்சி, 'கேப்டன்' தொலைக்காட்சி, 'என்.டி.டி.வி' தொலைக்காட்சி, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி மற்றும் 'கலைஞர்' தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
இதனை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்றுள்ளது. இதுகுறித்த அவர்களது செய்தி அறிக்கையில்,
’தமிழக முதலமைச்சரின் இந்த ஆணையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டி வரவேற்கிறது.
கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் இந்த ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
வாய்ப்பூட்டு சட்டங்களும் , மிரட்டும் அவதூறு வழக்குகளும் பத்திரிகைகளை – ஊடகங்களை இனி மிரட்டாது என்ற நம்பிக்கையை முதல்வரின் ஆணை உறுதிபடுத்தியுள்ளதாக கருதுகிறோம்’ எனக் கருத்து கூறியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் ‘பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் (29.7.2021) இன்று ஆணையிட்டுள்ளார்கள்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.