Pongal Parisu Thogai 2024: பொங்கலுக்கு ரூ.1000 இருக்கு.. ஆனா யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இல்லை? முழு விவரம்..
Pongal Parisu Thogai 2024: ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னரே ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு அறிவிப்பு:
அந்த வகையில் இந்த ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனால் மக்களிடையே குழப்பம் நீடித்து வந்தது. ரூ.1000 ரொக்கம் கிடைக்குமா? கிடைக்காதா? ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு தரப்பில் ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பின் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. ஏற்கனவே வெள்ள நிவாரணம், மகளிர் உரிமை தொகை என அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கப்படுமா என சந்தேசம் எழுந்தது.
இதனை தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கிப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடி சுமைகளின் போதும் தற்போது பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை. நம்மிடத்தில் இருந்து மத்திய அரசுக்கு செல்லும் ஒவ்வொரு ரூபாயிற்கும் மீண்டும் நாம் திரும்ப பெறுவது 29 பைசா தான்.பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் மாறுபட்டுள்ளது” என தெரிவித்தார்.
யாருக்கெல்லாம் ரொக்கம்:
நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் இந்த ரொக்கப்பணம் யாருக்கெல்லாம் என்பதையும் அரசு அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், வரி செலுத்துபவர்கள், பொது துறையில் பணியாற்றுவோர், மத்திய மாநில அரசு ஊழியார்களாக இருந்தால் அவர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படாது. கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.