விஜயபாஸ்கருக்கு வாய்ப்பளித்த முதல்வர் மு.க ஸ்டாலின்: குவியும் பாராட்டுக்கள்
கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா பரவலுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்துக் கட்சி தலைவர்களை கடந்த வாரம் சந்தித்தார் முதல்வர் முக ஸ்டாலின். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றுவது என அனைத்து கட்சிகளும் உறுதி அளித்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள 13 கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுகவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. எழிலன் திமுக சார்பில் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் முனிரத்னம், பாமக சார்பில் ஜிகே மணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
#COVID19 பெருந்தொற்று காலத்தில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுச் செயல்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 16, 2021
அரசுக்கு வழிமுறைகள் - ஆலோசனைகளை வழங்கிட எனது தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழு இன்று அமைக்கப்பட்டிருக்கிறது. pic.twitter.com/SVM32D9QBH
அதே போல், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மதிமுக சதன்குமார், விசிக எம்.எல்.ஏ. பாலாஜி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 கம்யூனிஸ் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
I congratulate @mkstalin & his party for the electoral win in the #AssemblyElections2021. My best wishes as he embarks on the new role amidst this most challenging time of #COVID19. Looking forward to collaborating on policies that will take Tamizhagam forward!
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) May 4, 2021
தேர்தல் முடிந்து திமுக வெற்றி பெற்றபோது வாழ்த்து தெரிவித்த விஜயபாஸ்கர் அரசுக்கு தேவையான ஆலோசனைகளை தந்து உதவத்தயார் என கூறியிருந்தார். முதல்வர் முக ஸ்டாலினும் இணைந்து பணியாற்றுவோம் என கூறியிருந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தந்திருப்பதை பலரும் கட்சி பேதமின்றி ஆரோக்கியமான விஷயம் என பாராட்டி வருகின்றனர்.