புனித பயணம் போறீங்களா... ரூ.37ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
தமிழக அரசு சார்பாக பல்வேறு புனித பயண திட்டங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புனித பயணங்களுக்கு உதவித்தொகை
தமிழக அரசு சிறுபான்மை மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த பக்தர்களின் புனித பயணங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் புனித பயண உதவித்தொகை வழங்கும் திட்டம் முக்கியமானது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர், பௌத்த, சமண, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்த (50 பேர்), சமண (50 பேர்), சீக்கிய (20 பேர்) மத உறுப்பினர்கள், பௌத்த மதம் புனித தளங்களாக உள்ள புத்த கயா, குசி நகர், சாரநாத், ராஜ்கிர், வைஷாலி (பீகார்), லும்பினி (நேபாளம்) ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஜெருசலேம் புனித பயணம்- உதவித்தொகை
இந்த நிலையில் கடந்த 01.11.2025- க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறுகையில், தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்கள் நபர் ஒருவருக்கு ரூ.37.000 வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 /-வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11. 2025- க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட ஆட்சியர் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருருந்து கட்டணமின்றி பெறலாம் எனவும், மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருகிற 28.02.2026 குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும் எனவும் அதற்கான முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600005






















