ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Free buses for men: சாலை பயணத்தின் போது ஒரு பேருந்து இரண்டு கார்கள் செல்லும் இடத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால், இரண்டு கார்களில் செல்வோரைப் போன்று 40 மடங்கு அதிகமானோரை பேருந்து ஏற்றிச்செல்கிறது.

'கட்டணமில்லா பொதுப்போக்குவரத்து' (Free Fare Public Transport)': தமிழ்நாட்டை முன்னேற்றும் மிகச்சிறந்த திட்டம், இது ஏன் தேவை என்று பாமக பாயிண்டுகளை பட்டியலிட்டுள்ளது.
2026க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் 'நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளை கட்டணமில்லாமல் இயக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கோரி வருகிறது. இந்நிலையில், 2021-முதல் பெண்களுக்கு கட்டணமில்லா நகரப்பேருந்து திட்டம் செயலாக்கப்பட்டது. இதனை ஆண்களுக்கும் விரிவாக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் இதுகுறித்து பாமக தெரிவித்து உள்ளதாவது:
'கட்டணமில்லா பொதுப்போக்குவரத்து' ஏன் தேவை?
போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட மாநகரங்களின் மிக முதன்மையான சிக்கல்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி அறிவியல் பூர்வமான, சாத்தியமாகக் கூடிய நிரந்தர தீர்வுகளை முன்வைக்கிறது. அத்தகைய தீர்வுகளுள் ஒன்று சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை தற்போதைய 3500 பேருந்துகளில் இருந்து 10,000 பேருந்துகளாக அதிகரிப்பதும், அவற்றை கட்டணமில்லாத இலவச பேருந்துகளாக இயக்குவதும் ஆகும். இதே திட்டம் தமிழ்நாட்டின் இதர நகரங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி 2016 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது.
எவ்வாறு, கல்வியும் மருத்துவமும் ஒரு அத்தியாவசிய தேவையோ, அதே போன்று தினசரி போக்குவரத்தும் ஒரு அத்தியாவசிய தேவைதான். என்றோ ஒரு நாள் பயணிக்க நேரும் நீண்டதூர பயணங்களுக்கு அவரவர் செலவிடுவது சரிதான். ஆனால், படிப்பு, வேலை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான போக்குவரத்தானது - கல்வி, நலவாழ்வு போன்று அரசே அளிக்க வேண்டிய அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும்.
இலவச பேருந்துகளால் ஏற்படும் பலன்கள்
- போக்குவரத்து நெரிசல் குறையும்: பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி அவற்றை இலவச பேருந்துகளாக இயக்கினால், வாகன நெரிசல் கணிசமாகக் குறையும். இதனால், பேருந்தில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பயணிப்பவர்களும் பெரும் பயனடைவர்.
- பயண நேரம் குறையும்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் நேரம் குறையும். அவரவர் பணிகளையும் வேலைகளையும் செய்வதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும். இதனால், பொருளாதார உற்பத்தி அதிகமாகும்.
- வேலைக்கு எளிதில் தகுதியான ஆட்கள் கிடைப்பார்கள்: பேருந்துகள் இலவசமாகும் போது, வேலை செய்யுமிடம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பயணக் கட்டணத்தைப் பற்றிய கவலை இன்றி திறமையான தொழிலாளர்கள் வேலை செய்ய முன்வருவார்கள். இதனால், வணிகர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் திறன் மிக்க தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பார்கள்.
- வேலை எளிதில் கிடைக்கும், வறுமை குறையும்: தொலைவில் வேலையிடம் கிடைத்தாலும் அங்கு சென்று பணிபுரிய இலவச பேருந்து வசதிகள் இருப்பதால், ஏழை எளிய மக்களுக்கு வேலை கிடைப்பது எளிதாகும். இதனால், வறுமை கணிசமாக ஒழியும்.
- காற்று மாசுபாடு குறையும்: தனியார் வாகனங்கங்களின் போக்குவரத்து குறைவதால், காற்று மாசுபாடு குறையும். இதனால், சுவாச நோய்கள் கணிசமாகக் குறையும். குழந்தைகளும், ஆஸ்துமா நோயாளிகளும் மாசுபாட்டின் கேடுகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
- சாலை விபத்துகள் குறையும்: சாலையில் ஓடும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் போது, வாகன விபத்துகளும் குறையும். குறிப்பாக, குழந்தைகளுடன் குடும்பமாக இருசக்கர வாகனத்தில் பயணிப்பது குறையும் என்பதால் - சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக தடுக்கப்படும்.
- கல்வி வாய்ப்புகள் எளிதாகும், தரம் உயரும்: பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு, இலவசமாகவும் ஆக்கப்படும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ, மாணவிகள் தங்குதடையின்றி பேருந்துகளை பயன்படுத்தும் வாய்ப்பு உருவாவதால் - கல்வி வாய்ப்பும் திறன் மேம்பாடும் அதிகரிக்கும்.
- வணிகம்,வியாபாரம் அதிகரிக்கும்: தொலைவில் இருக்கும் கடைகளுக்கும் வியாபார நிறுவனங்கங்களுக்கும் உணவகங்களுக்கும் மக்கள் எளிதாக வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படுவதால் வணிகம், வியாபாரம் அதிகரிக்கும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.
- சுற்றுலா அதிகரிக்கும்:சென்னை நகரம் விரும்பப்படும் நகரமாக மாறும். சுற்றுலா அதிகரிக்கும். இதனால், சுற்றுலா சார்ந்த தங்கும் விடுதி, உணவகம் போன்றவையும் பலன் அடையும்.
- பயண வேகம் அதிகரிக்கும்:பேருந்துகளை இயக்குவது எளிதாகும். பயணச்சீட்டு வாங்க வேண்டிய தேவை இல்லாததால் பயணிகள் ஏறுவதும், இறங்குவதும் எளிதாகும். பயண வேகம் அதிகரிக்கும்.
- வாகனம் நிறுத்துமிடம் அதிகமாகும்: தனியார் வாகனங்கள் அதிகமாகும்போது, அவற்றை நிறுத்துவதற்கான இடம் கிடைக்காமல் நகரங்கள் திணறுகின்றன. பல நூறு கோடி அரசு செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இட நெருக்கடிக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஒருபோதும் தீர்வு ஆகாது, அப்படி உலகில் எங்குமே நடந்ததும் இல்லை. இதற்கு மாறாக, பேருந்துகளை அதிகமாக்கி இலவசமாக்கும் போது, தனியார் வாகனங்கள் குறையும், குறிப்பாக இருசக்கர வாகனங்களை வெளியே எடுப்பது குறைவதால், சாலைகளில் வாகனம் நிறுத்த அதிக இடம் கிடைக்கும். இட நெருக்கடி குறையும்.
- உடல்நலம் மேம்படும்: பேருந்து பயணம் அதிகமானால், அதனால் மக்கள் நடப்பதும் அதிகமாகும் என்பது உண்மை. பேருந்து நிலையத்துக்கு வருவதற்கும், பேருந்திலிருந்து இறங்கிச் செல்வதற்குமாக - ஒரு பேருந்து பயணத்தின் போது, இரண்டுமுறை நடந்தாக வேண்டும். இதற்கேற்ப நகரங்களில் நடைபாதை வசதிகளையும் அதிகமாக்கினால் - நடப்பதால் மக்களின் உடல்நலம் மேம்படும்.
- காலநிலை மாற்றத்தக் கட்டுப்படுத்த உதவும்: பேருந்துகள் இலவசமாகும் போது டீசல், பெட்ரோல் பயன்பாடு குறையும். இதனால், கரியமில வாயு வெளியாகும் அளவு குறைக்கப்பட்டு புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.
- அன்னிய செலாவணி இழப்பு குறையும்:பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைவதால் நாட்டின் அன்னிய செலாவணி இழப்பும் குறையும்.
- நகரங்கள் மகிழ்ச்சியானவையாக மாறும்:போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் காத்திருக்கும் போதுமக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதுவும் நீண்டதூரம் பயணித்து பணியிடங்களுக்கு செல்வோர் ஒவ்வொரு நாளும் போருக்கு சென்று திரும்புவது போன்ற நிலைக்கு ஆளாகின்றனர். பயண நேரம் குறைந்து, காற்று தூய்மையாகி, இரைச்சலும் குறையும் நிலையில் மக்களின் மன அழுத்தம், உடல்நலப் பாதிப்புகள் குறையும். இதனால் நகரங்கள் மகிழ்ச்சியானவையாக மாறும்.
இலவச பேருந்துகள் - ஒரு நியாயமன தேவை.
சென்னையின் மக்களின் பயணத்தில் சுமார் 31% அளவுக்கு மட்டுமே கார்களும் இருசக்கர ஊர்திகளும் பயன்படுகின்றன. ஆனால் சாலையில் 75% இடத்தை அவையே அடைத்துக்கொள்கின்றன. இந்த நிலையை மாற்றாமல் சென்னையின் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண இயலாது. தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் இதுதான் நிலைமை.
சாலை பயணத்தின் போது ஒரு பேருந்து இரண்டு கார்கள் செல்லும் இடத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால், இரண்டு கார்களில் செல்வோரைப் போன்று 40 மடங்கு அதிகமானோரை பேருந்து ஏற்றிச்செல்கிறது. மாநகரப் போக்குவரத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமானால், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 5 முதல் 50 வரை குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன (Chennai faces a unique pollution challenge - Centre for Science and Environment 2013)
போக்குவரத்தில் நீதியை நிலைநாட்ட பொதுப்போக்குவரத்தை அதிகமாக்க வேண்டியது கட்டாயத்தேவை. அதற்கு சென்னை நகரின் பேருந்துகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி பயணத்தை இலவசமாக்குவது ஒரு சிறந்த வழி. இதனால், பேருந்துகளில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி, கார்களில் செல்வோருக்கும் பயனளிக்கும்.
இலவச நகரப் பேருந்து - ஒரு பொது நலச்சேவை (Common Good)
நகரப் பேருந்து பயணம் ஒரு பொது நலச்சேவை (Common Good) என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. நகர்ப்புற வாழ்வில் ஏராளமான பொது நலச்சேவைகள் உள்ளன. தீயணைப்பு துறை என்பது ஒரு பொது நலச் சேவை. இதற்காக அரசாங்கம் அதிகம் செலவிட்டாலும் கூட, தீயை அணைத்தற்காக கட்டணம் வசூலிப்பது இல்லை. காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர், போக்குவரத்துக் காவல்துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்துகின்றனர். இவற்றுக்காக பயனீட்டாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை. சாலையும் அதன் பராமரிப்பும் பொது நலச்சேவை தான். நகர்ப்புறங்களில் குப்பைகளை அகற்றுவதும் பொது நலச்சேவைதான். இதற்காகவெல்லாம் தனிப்பட்ட பயனீட்டாளர்கள் கட்டணம் செலுத்துவது இல்லை. நகரங்களில் உள்ள பூங்காக்கள் பொதுநலச்சேவைதான். அரசு பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள் அனைத்தும் பொதுநலச்சேவைதான். இவற்றுக்கெல்லாம் முழுக் கட்டணத்தை வசூலிக்க நினைத்தால் நகர வாழ்க்கை என்பது நரக வாழ்க்கை ஆகிவிடும்.
தீயணைப்பு, காவல்துறை, சாலை, குப்பை அகற்றம், பூங்கா, பள்ளிக்கூடம், மருத்துவமனை என பலவிதமான அத்தியாவசிய சேவைகள் 'பொது நலச்சேவைகளாக' இலவசமாகவே எப்படி அளிக்கப்படுகிறதோ - அதே போன்று, மிகமுக்கிய பொதுநலச்சேவையான நகரப் பேருந்துகளும் இலவசமாகவே அளிக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
சென்னை நகரின் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தியும், 8 ஆண்டுகளுக்கு மேல் ஓடும் பழைய பேருந்துகளை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிய பேருந்துகளை மாற்றியும், புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் அனைத்தையும் நவீன தரத்தில் இருப்பதை உறுதி செய்தும் - அவை அனைத்தையும் இலவச பேருந்துகளாக இயக்குவதே பாமகவின் சென்னை நகருக்கான இலவச பேருந்துகள் திட்டமாகும். இதற்காக கணிசமான நிதியை அரசாங்கம் செலவிட வேண்டும் என்றாலும் - உடல்நல மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மகிழ்ச்சியான வாழ்க்கை என இதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் பலன் - அரசின் செலவை விட பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் என்பது உறுதி.






















