தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கு..? விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு...!
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக அவர், நாளை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 4 மணிக்கு விழுப்புரம் வருகை தருகிறார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர், விழுப்புரம் சரக போலீஸ் டி. ஐ. ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு:-
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு 3 மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு. க. ஸ்டாலின், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
இந்த நிலையில், முதல்வர் வருகையையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதேபோல் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாலைகளும் புதிதாக போடப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. முதல்வர் கள ஆய்வையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வருகையையொட்டி அமைச்சர்கள் ஆய்வு :-
அமைச்சர் பொன்முடி ஆய்வு...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றவுள்ள ஆய்வு கூட்ட அறையினை அமைச்சர் பொன்முடி, எம் எல் ஏ புகழேந்தி நேரில் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி இந்தியாவிலையே களஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும் 26 ஆம் தேதி மீனவர்கள் விவசாயிகள், வர்த்தகளை சந்தித்து கோரிக்கைகளை முதல்வர் பெற்று கொண்டு, சட்டஒழுங்கு குறித்து கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், 27 ஆம் தேதி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு...
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி ஆகியோர் விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நவீன மின் தகன மேடை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார் , தொடர்ந்து கீழ்பெரும்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினையும், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தின் அருகே கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே என் நேரு கூறியதாவது:-
விழுப்புரத்தில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும். விரிவாக்கப் பகுதி அதிகளவு இருப்பதால் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வேண்டுகோள் இல்லை, அவர் மூத்த அமைச்சர், அவருடைய உத்தரவின் பேரில், அவருடைய தொகுதியான திருக்கோவிலூரில் விரைவில் அறிவு சார் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை போடுவது மாதிரி, கட்டடம் கட்டுவது மாதிரி, பாதாளச் சாக்கடை திட்டத்துக்கும், குடிநீர் திட்டத்துக்கும் ஒப்பந்ததாரர்கள் கிடைப்பதில்லை. அதனால், இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்களைக் கொண்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மக்கள் தொகைக்கேற்ப அருகிலுள்ள கிராமங்களை ஒன்றிணைத்து, விழுப்புரம் நகராட்சியை மிக விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.