CM Stalin EXCLUSIVE Interview: கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? சி.பி.ஐ, அமலாக்கத்துறை எப்படி? தேர்தல் வியூகம் என்ன? - பக்கா ப்ளானுடன் முதல்வர் ஸ்டாலின் - மெகா எக்ஸ்குளுசிவ்!
எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் (CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu) பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ( CM MK Stalin EXCLUSIVE Interview to ABP Nadu) பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.
ஏபிபி செய்தித் தளம்..!
ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ’ஏபிபி’ நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த 2021ம் ஆண்டு ’ஏபிபி நாடு’ எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது. இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின் பணியை ஊக்குவிக்கும் விதமாக, முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதன் ஒரு பகுதி இதோ!
கேள்வி: மோடிதான் பிரதமர் என களமிறங்கும் பா.ஜ.க.வை வீழ்த்த, தங்களின் கூட்டணியில் இவர்தான் பிரதமர் என அறிவித்து களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா? கடந்த முறை தாங்கள் ராகுல் காந்தியை முன் நிறுத்தினீர்கள் என்பதால் இந்தக் கேள்வி.
முதலமைச்சரின் பதில்: பிரதமர் யார் என்பதை விட ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். பெங்களூரு கூட்டம் முடிந்த உடனேயே நான் "யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இப்போது எங்களின் இலக்கு" என்று கூறியிருக்கிறேன். ஆகவே பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. மோடி தலைமையிலோ அல்லது வேறு யார் தலைமையிலோ பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒருமைப்பாடும், மாநில உரிமைகளும் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அதற்கேற்ப எதிர்க்கட்சிகளின் வியூகம் அமையும்.
இன்னொன்றையும் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக வருவார் எதிர்பார்க்கவுமில்லை. நிலையான ஆட்சி என்று யாரும் அறிவிக்கவும் இல்லை. ஆனால், அவர் தலைமையில் 10 ஆண்டுகள் இந்தியாவிற்கு நீடித்த வளர்ச்சிக்கான ஆட்சி வழங்கப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
கேள்வி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்நோக்க உள்ளது? அ.தி.மு.க- பா.ஜ.க. கட்சிகள், தற்போதே ஊழல் குற்றச்சாட்டுகளையும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதையும் பெரும் பேச்சாக்கி வருகின்றனர். தங்களுடைய பதிலடி என்ன?
முதலமைச்சரின் பதில்: அது பெரும் பேச்சு மட்டுமல்ல. வெறும் பேச்சும்தான். அப்படிச் சொல்வதை விட ஒரு பொய்ப் பிரச்சாரம் அது. மக்கள் நலன் காக்கும் திட்டங்களை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களின் எரிச்சலின் வெளிப்பாடு. குறுகிய காலத்தில் சென்னை கிண்டியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனையையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் கட்டி - மக்களுக்கு மருத்துவ சேவையும், மக்களுக்கு இளைஞர்களுக்கு அறிவுக் களஞ்சியமும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு.
இப்படி ஆக்கபூர்வமான திட்டத்தை செயல்படுத்தியுள்ள அரசை வேறு எங்காவது அடையாளம் காட்டிட முடியுமா? இந்த அரசுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாததால், தூசைத் துரும்பாக்கவும், ஈரைப் பேனாக்கவும் பார்க்கின்றனர். அது மக்களிடம் எடுபடாது. நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறும். "40-க்கு 40" என்ற எங்கள் முழக்கம் நிறைவேறும்.
கேள்வி: தற்போதெல்லாம் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் சி.பி.ஐ. வருமான வரித்துறை, ஆளுநர் ஆகியவை எப்போதும் முதன்மைப் பேசுபொருளாக இருக்கின்றன. இதைப் பற்றித் தங்களின் கருத்து என்ன?
முதலமைச்சர் பதில்: ”மக்களாட்சி மீதோ, ஜனநாயகத்தின் மீதோ, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதோ பா.ஜ.க. அரசுக்கு கொஞ்சமும் நம்பிக்கையோ மரியாதையோ இல்லை என்பதையே அதன் அராஜக, அத்துமீறிய நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆளுநரைக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக செயல்பட முனைவது, பா.ஜ.க.வின் கொள்கையை எதிர்க்கும் கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை போன்றவற்றை ஏவிவிடுவது, அதேநேரத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிற கட்சியினர் தங்கள் கட்சியில் இணைந்துவிட்டால் புனித நீர் தெளித்து அமைச்சரவையில் இடமளிப்பது போன்ற மிக மோசமான - இழிவான ஜனநாயகத்திற்கு ஆபத்தான போக்கில் பா.ஜ.க. செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் ஆளுநர் இசைவாணை அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு வைத்து - அந்த அனுமதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. 11 ஆவது முறையாக வாய்தா கேட்கிறது. ஆனால் அதே நாளில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நீர்த்துப் போன வழக்கில் அமலாக்கத்துறை சோதனை போடுகிறது. ஒன்றிய பாஜக. அரசின் இந்த இரட்டை வேடத்தை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் பா.ஜ.க.விற்கு தக்க தீர்ப்பு வழங்குவார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.





















