Chief Secretary Shivdas Meena: 150 டி.எம்.சி அளவு தண்ணீர்.. மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..
தூத்துகுடியில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
![Chief Secretary Shivdas Meena: 150 டி.எம்.சி அளவு தண்ணீர்.. மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா.. tn chief secretary shivdas meena inspected the areas affected by flood in tuticorin today december 23 2023 Chief Secretary Shivdas Meena: 150 டி.எம்.சி அளவு தண்ணீர்.. மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/23/6641049ea4b7416b6830199d0ae536a21703307596389589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “ மீட்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இன்னும் நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தண்ணீர் வடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே பாலம் அருகில் இருக்கும் தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அளவு மழை பெய்தால் எவ்வளவு பெரிய குளமாக இருந்தாலும் நிரம்பத்தான் செய்யும். 40 மணி நேரத்தில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டரில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பரப்பளவு) 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 டி.எம்.சி தண்ணீர் அதாவது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 50% அதிகமாகும். பாபநாசம் மணிமுத்தாறு அணையில் 10 மடங்கு அதிக தண்ணீர். இந்த தண்ணீர் கடலுக்கு சென்றாக வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.200 கோடி மதிப்பில் இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக மோட்டர் பம்புகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் இந்த மழை வெள்ள பாதிப்புகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரண தொகை வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)