TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே ஒவ்வொரு நாளும் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக, சட்டமன்ற கூட்டத்தொடர் ஒவ்வொரு நாளும் அனல் பறந்து வருகிறது.
இன்று கூடும் சட்டமன்றம்:
இந்த சூழலில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு கூடியுள்ளது.
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரியவில்சனும், தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒவ்வொரு துறைகள் மீதான மானியக்கோரிக்கை நடைபெற உள்ளது. இன்று மீண்டும் கூட உள்ள சட்டசபை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மீது விவாதம் நடக்க உள்ளது.
ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்:
சட்டமன்ற கூட்டத்தொடரை முன் எப்போதும் இல்லாத வகையில் மக்கள் நேரலையில் பார்த்து வருகின்றனர். அனுபவமில்லாத தவெக அரசுக்கு அனுபவமிகுந்த திமுக சட்டசபையில் கடும் நெருக்கடி அளிக்கும் என்றே பலரும் கருதி வந்த நிலையில், தவெக அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் திமுக-வினருக்கு சிறந்த முறையில் பதிலளித்து வருகின்றனர்.
இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் தற்போது மிகவும் அதிகளவில் விரும்பி சட்டசபை நிகழ்வுகளை பார்ப்பதாலும், விவாதங்கள் நேரலையில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுவதாலும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் வசம் உள்ள துறைகள்:
ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அந்தந்த துறையின் அமைச்சர்கள் பதிலளித்து பேசுவார்கள். முதலமைச்சர் விஜய் வசம் ஏராளமான துறைகள் உள்ள நிலையில், அவரது வசம் உள்ள மாற்றுத்திறனாளிகள் துறை தொடர்பான விவாதத்திற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரியும், நகராட்சி நிர்வாக துறைக்கு அமைச்சர் ராஜ்மோகனும் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை பேரவையில் ஆளுங்கட்சி தவெக - எதிர்க்கட்சி திமுக விவாதங்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம். மறுபுறம் அதிமுக எம்எல்ஏ-க்களும் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைப்பார்கள் என்று கருதப்படுகிறது.
அட்டாக் மோடில் திமுக:
கல்லூரி மாணவர் அமுதன், பள்ளி மாணவர் தனுஷ் ஆகியோர் கொலை விவகாரம், கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் கொலை விவகாரத்தை திமுக பெரியளவில் எடுத்துப்பேசும் என்று கருதப்படுகிறது. உதயநிதி கைதுக்கு பிறகு சட்டமன்றத்தில் தவெக அரசை மிக கடுமையாக திமுக உறுப்பினர்கள் விளாசி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு கடுமையான நெருக்கடி அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரங்களை தவெக அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















