இந்த புத்தகங்களுக்கு பின்னாடி இவ்ளோ கதையா? ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கொடுத்த 6 புத்தகங்கள்!
கருணாநிதியின் புகைப்பட திறப்பு விழாவிற்காக சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள 6 புத்தகங்கள் அதிக கவனம் பெறுவதாய் உள்ளது
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்காக சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புத்தகங்களை கொண்ட தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு அழைப்புவிடுப்பதற்காக கடந்த ஜூலை 19ஆம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த மு.க.ஸ்டாலின், புகழ்பெற்ற எழுத்தாளர் தேவதாஸ் மனோகர் எழுதி வரைந்த புத்தகமான '’Multiple facets of my Madurai’’ எனும் நூலை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தமிழில் வெளிவந்த 6 புத்தகங்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் நீல பத்மநாபன் (நீலகண்டப்பிள்ளை பத்மநாபன்) எழுதிய தலைமுறைகள், இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான சி.எஸ் செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்', புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜானகிராமன் எழுதிய 'செம்பருத்தி, கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் கி.ரா எழுதிய 'கரிசல் கதைகள்', பெண் எழுத்தாளார் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ’சூழலில் சுழலில் மிதக்கும் தீபங்கள்’ ஆகிய நாவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புத்தகங்களை முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இந்த 6 புத்தகங்களில் திருக்குறளை தவிர மற்ற புத்தகங்கள் குறித்து அதிகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைமுறைகள்- நீல பத்மநாபன்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை பூர்வீகமாக கொண்ட நீல பத்மநாபன் கேரள மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1968ஆம் ஆண்டு இவர் எழுதிய தலைமுறைகள் நாவல், இரணியலில் வாழும் செட்டியார் சமூகத்தின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றை நாஞ்சிநாட்டு வட்டார வழக்கிலேயே பதிவு செய்துள்ள படைப்பாகும். பழமைவாதத்தை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த திரவியத்தின் முற்போக்கு செயல்பாடுகளை குறித்து இந்த நாவல் பேசுகிறது.
வாடிவாசல் -சி.சு.செல்லப்பா
நவீன தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா, ஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டு எழுதிய வாடிவாசல் நாவலானது 1959ஆம் ஆண்டு வெளிவந்தது. 2013இல் என். கல்யாண்ராமன் மொழிபெயர்ப்பில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பிரஸ் வெளியீடாக ஆங்கிலத்தில் வெளியானது. ஏறுதழுவுதலில் காளைக்கும், வீரனுக்குமான உணர்வுகளை அடிப்படையாக வைத்து எழுதியுள்ள இந்த நாவலை நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் படமாக்கி கொண்டிருக்கிறார்.
செம்பருத்தி-தி.ஜானகிராமன்
மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட தி.ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி நாவலானது 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கல்களை பேசும் நாவலாக செம்பருத்தி உள்ளது. தான் காதலித்த பெண்ணே அண்ணியாக வருவதும் ஓரிரு வருடங்களிலேயே அண்ணன் இறந்து விடுவதும், பிறகு அந்த அண்ணி மீண்டும் கதை நாயகனை நினைத்துக் கொண்டே அதே வீட்டில் 20 வருடங்களை கடந்து வாழ்வதும் குறித்து இந்த நாவல் பேசுகிறது.
கரிசல் கதைகள் - கி.ராஜநாராயணன்
கரிசல் இலக்கியங்களின் தந்தை என அழைக்கப்படும் சாகிதிய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய கரிசல் கதைகள் நூலானது கரிசல் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை பேசுவதாக உள்ளது. கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது. வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும் இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது என இப்புத்தகத்தை பற்றி கி.ராஜநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.
சூழலில் சுழலில் மிதக்கும் தீபங்கள்-ராஜம் கிருஷ்ணன்
பெண்களின் அடிமை நிலையையும், சமூக அவலங்களையும் தனது நாவல்களில் பதிவு செய்த ராஜம் கிருஷ்ணனின் சூழலில் சுழலில் மிதக்கும் தீபங்கள் நாவல் 1987ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்கள் அனைத்தும் 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அரசுடமையாக்கப்பட்டது.