வெளுத்து வாங்கும் கனமழை... இடிந்து விழுந்த வீடு - 4 பேர் உயிர் தப்பிய அதிசயம்
கனமழையின் காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிர் தப்பிய அதிசயம்.

திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் தொடங்கிய கனமழை
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது இந்த நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை மீண்டும் பெய்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், விஜயபுரம், தெற்கு வீதி, பனகல் சாலை, அதே போன்று விளமல், தண்டலை, அம்மையப்பன், புலிவலம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

கனமழையால் இடிந்து விழுந்த வீடு
மேலும், கனமழையின் காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் முதியவரின் கால் முறிந்தது. இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிர் தப்பினர்.
திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி ஏழாம் வகுப்பு படிக்கும் கபஸியா, நான்காம் வகுப்பு படிக்கும் ரோகித் ஆகிய இரண்டு குழந்தைகள் மற்றும் 70 வயதான தனது தந்தை முருகேசன் ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.நேற்று இரவு முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை வெங்கடேசனின் ஓட்டு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனை அடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முருகேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் வீட்டிலிருந்த வெங்கடேசன் அவரது மனைவி ராஜேஸ்வரி இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது குறித்து கொரடாச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















