திருவண்ணாமலை : ’மாடு மேய்த்தவரை தலைவராக ஏற்கமுடியாது’ என அராஜகம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவர் புகார்!
எங்கள் வீட்டில் மாடு மேய்த்தவரை, ஊராட்சி மன்ற தலைவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என ஊராட்சி செயலாளர் அடாவடித்தனத்தால், ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கிராமங்கள்வாரியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வந்தது இதில் ஏழுமலை என்பவர் 12.12.2019-இல் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 30.12.2019 வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒருமாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றபோது அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கல்லரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக, இப்பகுதிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியல் இனத்திலிருந்து ஊராட்சி மன்ற தலைவராக அப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாக்களித்த மக்களுக்கு எந்தப் பணியும் செய்யவிடாமல் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் இடையூறு செய்து வந்திருக்கிறார். ”எங்கள் வீட்டில் மாடு மேய்த்த வரை ஊராட்சி மன்ற தலைவராக ஏற்க முடியாது” என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் இருக்கையில் அமர விடாமல் தனியாக பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைத்து அவமானப் படுத்துவதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வருவதால் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் எப்போதும் மூடிய நிலையிலேயே வைத்துள்ளதாகவும், ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தேவைப்பட்ட கையொப்பத்தை பெறுவதற்கு மட்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து கையொப்பம் பெற்றுக்கொண்டு அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கான எவ்வித பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், தன்னை ஒருமையில் பேசுவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை வேல்முருகனே செய்வதும் இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் தெரிவித்தும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஏழுமலை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டு பின்பு அந்த ஊராட்சிக்கு விசாரணைக்காக வந்த மாவட்ட திட்ட இயக்குநர் ஒரு தலைபட்சமாக விசாரணை செய்தும் இருவரும் சமரசமாக செல்லும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் மன உளைச்சல் தருவதாகவும், தன்னை நம்பி வாக்களித்த கிராம மக்களுக்கான ஊராட்சி பணிகளை செய்ய இடையூறு செய்வதால் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
”எங்கள் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கொடுக்காமல் அவருடைய உறவினருக்கும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் ஊராட்சி செயலாளர் கொடுத்து வருகிறார். இதைக்கேட்டால் என்னை மிரட்டுகிறார்” என்று முறையிட்டு, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பூட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார் ஏழுமலை. மேலும் ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவரும், ஊர் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்