Tiruttani Master Plan: தரமாய் மாறப்போகும் திருத்தணி.. மாஸ்டர் பிளான் திட்டம்.. 18 மாதம் டார்கெட்..!
Tiruttani Master Plan Details: திருத்தணியில் பக்தர்கள் வசதிக்காக மாஸ்டர் பிளான் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அறுபடை கோயில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகருக்கு உரிய நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் படையெடுப்பது வழக்கமாக உள்ளது.
திருத்தணியில் குவியும் பக்தர்கள்
திருத்தணி முருகர் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆடி கிருத்திகை, தைப்பூசம், படித்திருவிழா, பிரம்மோற்சவம் உள்ளிட்ட நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 12 மணி நேரம் அன்னதானம் வழங்கப்பட்டாலும், அன்னதானம் கூடத்தில் இட நெருக்கடி இருந்து வருகிறது. அதிகபட்சமாக அன்னதான கூடத்தில், 150 பேர் வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும் என்பதால், பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வேதனை
பக்தர்கள் அதிகளவு வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிகளவு வெளியூர் வாகனங்கள் வருவதால், வாகனம் நிறுத்துவதற்கும் இடமின்றி பக்தர்கள் அவதியுற்று வருகின்றனர். பக்தர்கள் தங்குவதற்கு இடம் இல்லாததால், அவதி அடைந்து வருகின்றனர். அதேபோன்று பல்வேறு அடிப்படை வசதிகளும், குறைவாக இருப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
திருத்தணி மாஸ்டர் பிளான் திட்டம் - Master Plan For Tiruttani
பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில், இந்து சமய அறநிலைத்துறை கோயில் வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர "திருத்தணி மாஸ்டர் பிளான் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக 103 கோடி ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஹாப்பி அண்ணாச்சி
கோயிலுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 அடுக்கு கொண்ட அன்னதானம் கூடம் அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் சாப்பிடுவதற்கும், 500 பக்தர்கள் காத்திருக்கும் அறை ஆகியவை கட்டப்பட உள்ளன. ராஜகோபுரம் மேற்கு பக்கத்தில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புப்படிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் "டோல் பிளாசா" அமைக்கப்பட உள்ளது.
இலவச தங்கும் கூடம்
அதே போன்று மலைப்பகுதியில் கார்த்திகேயன் குடில், அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு விடுதிகள், குளியல் அறை, கழிப்பறை, வாகன நிறுத்தும் வசதி, ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
அதேபோன்று பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால், புதியதாக 20 கடைகள் கட்டப்பட உள்ளன. அதேப்போன்று 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளன.
செயல்பாட்டுக்கு வருவது எப்போது ?
திருத்தணி மாஸ்டர் பிளான் தொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு, ஒன்றரை வருடங்களுக்குள் பணிகளை முழுமையாக முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.