திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் திமுக தலைமை!
நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை திமுகவின் சரவணன் ராஜினாமா செய்தார். கவுன்சிலர்களுடன் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவியிடம் வழங்கினார்
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோவை திமுக மேயர் ராஜினாமா செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், திருநெல்வேலி திமுக மேயரும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் திமுக மேயர்கள்: திருநெல்வேலி திமுக மேயர் சரவணன் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்திருக்கிறது. மேயர் மீதான தங்களை புகார்களை திமுக தலைமைக்கு ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக, 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் வழங்கினர். நிலைமை கைமீறி போகவே, திமுக மூத்த தலைவர்களும் அமைச்சர்களுமான கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, தங்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருநெல்வேலி திமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல்: இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன்பிறகும், மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைக்கப்பட்டு சரவணனிடம் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், நெல்லை மாநகராட்சி திமுக மேயர் ராஜினாமா செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, திருநெல்வேலி திமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தள்ளிவிடப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. உட்கட்சி பூசல் காரணமாக திருநெல்வேலி தொகுதியை கைப்பற்றுவது கடினம் என சொல்லப்பட்டு வந்தது.
இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை களத்தில் இறக்கி காங்கிரஸ் வேட்பாளரை ஜெயிக்க வைத்தது. வெளிமாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரை அழைத்து வந்து வெற்றி பெற வைக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டது.