Omni Bus Ticket: பயணிகள் ஷாக்..! தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு, இதுதான் காரணமாம்..!
Omni Bus Ticket Fare: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Omni Bus Ticket Fare: சுங்க கட்டண உயர்வு காரணமாகவே டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு:
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் விளைவாக தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்ப, 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தினசரி பேருந்துகளில் தொலைதூரம் பயணிக்கும், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு கோரிக்கை:
இதனிடையே, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் 5 முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு முன் இருந்த கட்டணத்தை விட கூடுதலாக ₹5 முதல் ₹150 வரை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. . கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டது.
இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு காலாவதியான டோல்கேட்களை அப்புறப்படுத்தும் படியும், தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெறுமாறும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் சுங்கச்சாவடி கட்டணம்:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில், சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால், தேர்தல் நடைபெற்று வந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட, சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த ஜுன் மாதம் 1ம் தேதி அந்த கட்டணம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் 2 மாத இடைவெளியிலேயே மீண்டும் தமிழ்நாட்டின் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.