Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: போலீசார் மீது காயம் ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடியபோது, ஜூமான் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். எனினும் திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை.
ஹரியாணாவைச் சேர்ந்த ஏடிஎம்கொள்ளையர்கள், திருச்சூரில் இருந்து திருடிய பணத்துடன் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பிடிபட்ட நிலையில், கொள்ளையர்களைப் பிடித்தது குறித்து சேலம் டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
’’திருச்சூர் எஸ்பி அளித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிரிட்டா காரை சோதனை செய்து வந்தோம். பின்னர் கன்டெய்னர் லாரியில் கொள்ளை கும்பல் வருவதாக தெரிவித்த தகவலின் பேரில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாலேயே கண்டைனர் லாரியைத் துரத்திப் பிடிக்க நாமக்கல் காவல் துறையினர் முயன்றனர்.
சங்ககிரி டோல்கெட் வரை கண்டெய்னர் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளது. அப்போது இதர வாகனங்களை மோதியபடி சென்றது. வாகனத்தின் முகப்பில் 4 பேர் இருந்தனர்.
வாகனத்தை வெப்படை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும்போது வாகனத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாகனத்தில் இருந்து இரண்டு பேர் பையுடன் தப்பிச் செல்ல முயன்றனர்.
திட்டமிட்டு என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை
அவ்வாறு சம்பந்தப்பட்ட லாரியைத் துரத்திப் பிடித்தபோது கொள்ளையர்கள், வண்டியில் இருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் மீது காயம் ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடியபோது, ஜூமான் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். எனினும் திட்டமிட்டு, என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட லாரி வழக்கமாக சரக்கு ஏற்றி வரும் வாகனம்தான்.
கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரில் 5 பேர் பல்வாள் மாவட்டத்தையும் 2 பேர் நூ மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 7 கொள்ளையர்களில் ஒருவரான ஜூமான் (40 வயது) என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், அஸ்ரூ என்னும் குற்றவாளி (28 வயது) 2 கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து, பள்ளிபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கொள்ளையர்களிடம் வெப்படை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளை நடந்ததோ, அவர்கள் எல்லோரும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை
பணம் அதிகமாக இருக்கும் என்பதால், எஸ்பிஐ ஏடிஎம்க்களுக்கு குறி வைத்துள்ளனர். கூகுள் மேப்பில் ஏடிஎம்மைப்பார்த்து, குறிவைத்து கொள்ளை அடித்துள்ளனர். பிடிபட்ட கும்பல் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை. டெல்லியில் இருந்து சரக்கு ஏற்றி வந்ததுபோல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்’’.
இவ்வாறு சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.