கரூர் விவசாயியிடம் ஆன்லைன் மோசடி- 7 ஆண்டுகளுக்கு பின் டெல்லிக்கே சென்று மூவரை தூக்கிய சிபிசிஐடி
2014ஆம் ஆண்டு ஆன்லைன் பரிசுத்தொகை தருவதாக கூறி கரூர் விவசாயியிடம் 9.20 லட்சம் மோசடி செய்த டெல்லி வாலிபர்கள் மூவர் கைது.
கரூர், வெங்கமேடு சின்ன குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணையன் (54) என்பவருக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆன்லைன் வழியே 10 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை விழுந்ததாக போன் மூலம் குறுஞ்செய்தி வந்தது. பரிசுத் தொகையை பெறுவதற்கு முன்பாக வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் டெல்லியை சேர்ந்த முன்வர் நஜார்(26) என்பவரின் வங்கிக் கணக்கில் 9.20லட்சத்தை வெங்கமேட்டில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கி கிளை மூலமாக கண்ணையன் செலுத்தியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட சில நாட்களில் முன்வர் நஜார், கண்ணையனிடமிருந்து தொடர்பைத் துண்டித்ததால் சந்தேகமடைந்த விவசாயி கண்ணையன், இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப் பிரிவில் கடந்த 2014ஆம் ஆண்டு புகார் அளித்தார். கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது.
இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட நிலையில், சென்னை காவல்துறை சிபிசிஐடி இயக்குனர் உத்தரவின்பேரில் கரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திலகாதேவி தலைமையிலான தனிப்படை போலிசார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று விசாரணை நடத்தியதில் டெல்லி ரயில்வே ரோடு பகுதியைச் சேர்ந்த முன்வர் நஜார் (26) சொகில் அன்சாரி (24), மகேஷ்(29) ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது. மூவரையும் கடந்த ஜூலை 30ஆம் தேதி கைது செய்து பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் மூவரையும் சிபிசிஐடி போலீசார் திருச்சி அழைத்துவந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மூவரும் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2இல் ஆஜர்படுதிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் மூவரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.