குடிக்கு அடிமையாக இருப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படும் - வேல்முருகன்
குடிக்கு அடிமையாக இருப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படும், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடையாது என வேல்முருகன் திட்டவட்டம்.
விழுப்புரம்: குடிக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்பட மாட்டது. தற்போது குடிக்கு அடிமையாகி கட்சி பொறுப்புகளில் இருப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படும். மேலும் அனைத்து குற்றங்களுக்கும் முக்கிய காரணம் மது தான், இதனால் தான் இளைஞர் சமுதாயம் சீரழிந்துவிட்டது என கூறிய வேல்முருகன் கட்சியில் மது பழக்கம் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் கட்சியின் பொறுப்புகள் வழங்கப்படும் என திட்டவட்டமாக கூறினார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் குமரன் ஏற்பாட்டின்பேரில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணைந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சமூக விரோதிகள் தமிழகம் முழுவதும் பெரியார், அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகிகள் சிலைகளை அவமதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகிற சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்றும் சுங்கசாவடிகள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து கொண்டு இருப்பதால் பரனூர் சுங்கசாவடியை முதலில் அகற்ற வேண்டுமென கூறினார்.
ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்குவதற்கு முன்பாகவும் பாஜகவை மக்கள் தூக்கி எரிந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தான் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளதாகவும் இருப்பினும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா நிறைவேற்றி இருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிற பாசிச பாஜகவை தூக்கி எரிய வேண்டும் என்றும் அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போல் 10.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் தான் 10.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறினார்.
கர்நாடாக அரசு தண்ணீர் தர மறுப்பதை கண்டித்து தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சிசார்பில் போராட்டம் செய்து வருவதாகவும், கர்நாடகாவில் பாஜகவும் காங்கிரஸ் யார் ஆட்சி பொறுப்பேற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதால் தான் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தான் பிரச்சாரம் செய்யவில்லை என கூறினார். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் நாடாளுமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு பிரச்சனை ஏற்பட்டுள்ளதை சமாளிப்பதற்காக அண்ணாமலைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் கூட்டணியில் இல்லை என பேசிவிட்டு தற்போது கூட்டணி கட்சி குறித்து பேச கூடாதென அதிமுக தலைமை அறிக்கை வெளியிடுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.