'போலீசார் மறைந்து சுட்டனர்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சுடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற போது 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் துப்பாக்கிச் சுடுதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக ஃப்ரண்ட் லைன் தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி
- தூத்துக்குடி துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் காவல்துறையினர் கூறியது போல் மக்கள் துப்பாக்கிச் சுடுதல் நடந்த வேண்டிய அளவிற்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.
- துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் மறைவான பகுதியிலிருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது.
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் காவல்துறையினர் ஒரு பூங்காவிலிருந்து மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த சம்பவத்தில் அப்போதைய தூத்துக்குடி ஐஜி சைலேஷ் குமார் யாதவ், எஸ்பி மகேந்திரேன், டிஎஸ்பி லிங்கதிருமாறன் உள்ளிட்ட காவலர்கள் 3 இன்ஸ்பெக்டர்கள், 7 கான்ஸ்டெபிள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை கூறியுள்ளதாக தெரிகிறது.
- மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக அப்போது இருந்த வெங்கடேசன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
- அங்கு குடியிருந்த மக்களை கலைக்க முடியாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சுடு நடத்தியதாக கூறியதில் உண்மை இல்லை என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
- காவல்துறையினர் போராடும் மக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவிடாமல் தடுத்திருக்கும் சூழல் இருந்த போதும் காவல்துறை அதை சரியாக செய்யவில்லை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
- இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாயை 50 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் இந்தச் சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு அறிக்கை தொடர்பாக அந்த தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது வெளியே வரும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை அனைத்தும் பரிந்துரைகள் மட்டுமே இவற்றை முழுமையாக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது விசாரணை ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியார்புரத்தில் போராட்டம் தொடங்கியது. தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக நூறு தினங்கள் போராட்டம் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.