D Jayakumar: “தர்மம் வென்றிருக்கிறது; ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும்” - ஜெயக்குமார் சரவெடி
D Jayakumar: தர்மம் வென்றிருக்கிறது; நியாயம் வென்றிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு ரத்து என்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பானி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதையெடுத்து தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய ஜெயக்குமார்,” இது ஒரு வராலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தீர்ப்பு இது. தர்மம் வென்றிருக்கிறது; நியாயம் வென்றிருக்கிறது; இனி அடுத்தக்கட்ட முடிவுகளை சட்ட வல்லுநர் குழுவினர் கவனித்து கொள்வார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காட்சிய வழியில், சட்டப்பூர்வமாகத்தான் பொதுக்குழு நடைபெற்றதாகவும், இனியும் சட்ட நடைமுறைகளை பின்பற்றியே செயல்படுவோம் என கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இந்தத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, “ நாங்கள் அனைத்தும் சட்ட ரீதியிலாக அணுகி வருகிறோம். சட்டப்படி பயணிக்கும் எங்களுக்கு செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று பதலளித்தார்.
#JUSTIN | அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ - ஜெயக்குமார்https://t.co/wupaoCQKa2 | #AIADMK #EdappadiPalaniswami #madrashighcourt #OPanneerselvam pic.twitter.com/0K5R7yzAu7
— ABP Nadu (@abpnadu) September 2, 2022
இனி அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “ அவருடைய எதிர்காலம் ஜீரோ.” என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு:
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு ரத்து என்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அளித்த தீர்ப்பினால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகியது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த 25-ந் தேதியே அனைத்து தரப்பின் வாதங்களும் நீதிமன்றத்தில் நிறைவு பெற்றது. இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான குரு கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான சி.எஸ். வைத்தியநாதன், அரியமா சுந்தரம், விஜய்நாராயண் ஆகியோர் வாதிட்டனர்.
நீதிமன்ற விசாரணையின்போது, பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாக வாதிட்டனர். மேலும், ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு அதிகாரம் பெற்றவரால் கூட்டப்படவில்லை என்ற நீதிபதியின் கருத்து தவறு என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 1.5 கோடி உறுப்பினர்களில் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலிப்பார்கள் என்பது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் வாதிட்டனர். மேலும், ஜூன் 23-க்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுவில் கோரவில்லை என்றும் பழனிசாமி தரப்பினர் வாதிட்டனர்.