திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு செலவில் இன்று முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொந்தசெலவில், திருவண்ணாமலையில் 2 அம்மா உணவகங்களில் ஏழை எளியவர்களுகு இலவச உணவு வழங்கப்படுகிறது.
பஞ்சபூத தலமான திருவண்ணாமலையில், காமராஜர் சிலை அருகில் உள்ள சமுத்திர காலனி, மற்றும் நகர் பகுதியில் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு மக்கள் பலர் அல்லல் உற்று இருக்கின்றனர். கொரோனாவால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மக்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா பெருந்தொற்று காலத்தில் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு முடியும் வரை பொதுமக்களுக்கு ஆங்காங்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மே 26 முதல் திருவண்ணாமலையில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் சாதுக்கள், பொதுமக்கள் மற்றும் பணியிலுள்ள காவல்துறையினருக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சார்பில் இலவச உணவு தினமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், தமிழக அரசு மேலும் ஊரடங்கு நீடித்த காரணத்தினாலும், தினமும் வேலை செய்தால்தான் கையில் பணம் கிடைக்கும் என்ற நிலையில் பலர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலைமையும் பசியையும் கருத்தில்கொண்டு, உணவு இல்லாமல் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற எண்ணத்தில்,திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள காமராஜர் சிலை மற்றும் பேருந்து நிலையம் உணவகங்களிலும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேலையும் தனது சொந்த செலவில் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அறிவித்துள்ளார்.