MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டியதோடு, பாஜக-வையும் சாடினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முழு வீச்சில் தயாராகி வரும் திமுக, இன்று திருவண்ணாமலையில் இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாட்டை நடத்தியது. அதில், கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார். அதே நேரத்தில், பாஜகவை கடுமையாக சாடினார்.
“50 ஆண்டுகள் பின்னாள் சென்றது போல் உணர்கிறேன்“
திருவண்ணாமலை மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், டைம் டிராவல் செய்து 50 ஆண்டுகள் பின்னாள் சென்றது போல் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர் அணியை வளர்த்தெடுக்க, ஒரு இளைஞனாக கிராமம் கிராமமாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது ஞாபகம் வருவதாக அவர் தெரிவித்தார்.
இரவு பகல் பாராமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள் தோறும் கொடியேற்றம், திண்ணை பிரசாரம், நாடகம், பொதுக்கூட்டம் என நிகழ்சிகளை நடத்தி, உழைத்து வளர்த்த திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
உதயநிதியை பாராட்டித் தள்ளிய மு.க. ஸ்டாலின்
திமுகவின் லட்சிய பயணத்திற்கு துணை நின்றது இளைஞர் அணி தான் என்று குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், “தற்போது அந்த பணியை உதயநிதியிடமும், உங்களிடமும்(அங்கு கூடியிருந்த இளைஞர்கள்) வழங்கியிருக்கிறோம்“ என்று தெரிவித்தார்.
உதயநிதியும் பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், இன்னும் சொல்லப் போனால், உதயநிதி இறங்கி அடிக்கிறார் என தெரிவித்தார். மேலும், கொள்கை எதிரிகள், உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று புலம்புவதாகவும், அந்த அளவிற்கு கொள்கைகளில் அவர் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார். திமுகவிற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து உதயநிதி செயல்படுவதாக பாராட்டினார் மு.க. ஸ்டாலின்.
பாஜக-வை சாடிய மு.க. ஸ்டாலின்
மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்த ஆணவத்தில், வலது சாரி அமைப்புகளும், பிற்போக்கு சக்திகளும் மிகவும் வேகமாக, முன் எப்போதும் இல்லாத ஆக்ரோஷத்தோடு செயல்படத் தொடங்கி இருப்பதாக மு.க. ஸ்டாலின் சாடினார்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடிய மக்களிடம், பெய்களையும், அவதூறுகளையும், பிற்போக்கு எண்ணங்களையும் தேன் தடவிய வார்த்தைகளால் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்லாமல், இந்தியாவையும், நாட்டின் பன்முகத் தன்மையையும் காக்க வேண்டிய கடமை நம் தோள்களில் உள்ளது என குறிப்பிட்டார்.





















