Rajendra Balaji Arrest: ராஜேந்திர பாலாஜி கைதிற்கு எதிர்ப்பு... காவல்துறை வாகனம் மறிப்பு.. கைதான அதிமுகவினர்..
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் திரண்டு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக பணம் மோசடி வழக்கில் 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின்னர் மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இந்தநிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு ராஜேந்திரபாலாஜி அழைத்து வரப்பட்டபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்த முயற்சி செய்த குற்றத்திற்காக அதிமுகவினரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனும் கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜியிடம் டிஜிபி விசாரணை :
கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தற்போது மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகிய இருவரும் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறையிம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து தமிழ்நாடு போலீஸ் இவரை கைது செய்யும் முனைப்பில் தேடுதல் வேட்டையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்