(Source: Poll of Polls)
உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு மிதிவண்டி இல்லை ஸ்கூட்டி... அமைச்சர் பொன்முடி கூறிய சுவாரசிய தகவல்...
உதயநிதி தலைமையில் ஆட்சி அமைக்கிற போது நிச்சயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டியும் கொடுக்கும் காலம் வரும் - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் : உதயநிதி தலைமையில் ஆட்சி அமைக்கிற போது நிச்சயமாக மாணவர்களுக்கு ஸ்கூட்டியும் கொடுக்கும் காலம் வரும் என திருவெண்ணைநல்லூரில் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:
பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்த ஆண்டு முதல் தமிழ்புதல்வன் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. நானும் மாவட்ட ஆட்சியரும் படிக்கும் காலத்தில் பெற்றோர்களை நம்பியே படித்தோம். தற்போது அரசாங்கமே படிக்க பெண்களுக்கு உதவி செய்கிறது. இதனை அரசியலுக்காக சொல்லவில்லை மாணவிகள் வரலாற்றையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் பெண்கள் ஏன் படிக்கவில்லை, தற்போது பெண்கள் எப்படி படிக்கிறோம் என்பதை மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் நிறைய படிக்க வேண்டும், நன்றாக படிக்க வேண்டும். தற்போது ஆண்களை விட பெண்கள் நன்றாக படிக்கிறார்கள். தற்போது முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து முதல்வர் படிக்க சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார்.
எனவே தான் முதல்வர் கூறினார் என் இரண்டு கண்களில் ஒன்று கல்வி, ஒன்று சுகாதாரம் என பேசியுள்ளார். நடந்து சென்று படித்த காலம் சென்று, தற்போது அனைவரும் மிதிவண்டியில் செல்லக்கூடிய காலம் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலம் சென்றால் மிதிவண்டி வேண்டாம் ஸ்கூட்டர் வேண்டும் என கேட்பீர்கள். இதுதான் காலத்தின் வளர்ச்சி. கண்டிப்பாக ஸ்கூட்டி வரும்.
உதயநிதி தலைமையில் ஆட்சி அமைக்கிற போது நிச்சயமாக ஸ்கூட்டியும் கொடுக்கும் காலம் வரும். உதயநிதி இளைஞர்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார் என பேசியுள்ளார்.