Aavin Milk Distribution: பால் வரத்து குறைவு.. ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு? அமைச்சர் கூறுவது என்ன?
வெளி மாவட்டங்களில் இருந்து பால் வரத்து குறைவாக இருந்ததால் சென்னையின் மேற்குப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து பால் வரத்து குறைவாக இருந்ததால் சென்னையின் மேற்குப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது.
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாக பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு மற்றும் பால் அடுக்கி கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை காரணமாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் என கூறப்பட்ட நிலையில் உண்மையான காரணம் பால் வரத்து முடங்கியது தான் என தெரிய வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 10க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாததால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்குள்ளேயே நின்றன. இதனால் குறித்த நேரத்திற்கு பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
இதன் காரணமாக மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர், பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அமுல் நிறுவனம் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து கொள்முதலை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக கூட ஆவினுக்கு வர வேண்டிய பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின் பால் விநியோகம் சரி செய்யப்பட்டதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மாதவரம் மற்றும் காக்களூர் பால் பண்ணைகளில் இருந்து முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ”பால் வரவு குறைவாக உள்ளது இதனால் சில தட்டுப்பாடுகள ஏற்படுகிறது. பால் கொள்முதல் உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து ஆய்வு கூட்டங்களும், களஅய்வும் நடத்தப்பட்டு வருகிறது, விரைவில் இந்த பிரச்சணை சரி செய்யப்படும். அமுல் பால் கொள்முதல் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பது 100% பொய்யான் தகவல். ஆவின் பால் கொள்முதல் தற்போது 45 ஆயிரம் லட்சமாக உள்ளது அதனை கூடிய விரைவில் 70 அயிரம் லட்சமாக உயர்த்தப்படும்” என தெரிவித்துள்ளார்.