Anbumani Ramadsoss Statement :கொரோனா காலத்தில் அரசுக்கு துணை நின்றவர்கள்.. மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக - அன்புமணி
தேசிய மருத்துவர்கள் நாளில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
![Anbumani Ramadsoss Statement :கொரோனா காலத்தில் அரசுக்கு துணை நின்றவர்கள்.. மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக - அன்புமணி Their demand should be fulfilled on National Doctors Day Dr Anbumani Ramadoss Statement Anbumani Ramadsoss Statement :கொரோனா காலத்தில் அரசுக்கு துணை நின்றவர்கள்.. மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக - அன்புமணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/55563360e519689aa3918dc07c6c3f981688194638890571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கடந்த நான்காண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் இன்னும் பரிசீலனைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை ஏற்பு குறித்த அறிவிப்பை வெளியிட தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப் படும் ஜூலை ஒன்றாம் தேதியை விட சிறந்த தருணம் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்காது.
ஊதிய முரண்பாடு
அரசு மருத்துவர்களுக்கான போராட்டக்குழு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 4 ஆண்டுகளாக அறப்போராட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் ஊதிய முரண்பாட்டுக்கு காரணம். 13-&வது ஆண்டு பணிக்காலத்தின் இறுதியில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1.23 லட்சம் அடிப்படை ஊதியத்தை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்குவதன் மூலம் இந்தச் சிக்கலை தீர்க்க முடியும்.
2009&ஆம் ஆண்டில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிறப்பித்த அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால சரத்துகளைப் பயன்படுத்தி இதை செய்ய முடியும். இந்த ஊதிய உயர்வு கோரிக்கையை செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகிறது. இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 0.1 விழுக்காட்டுக்கும் குறைவு தான். ஆனாலும் இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்கு கூட தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வராதது வருத்தமளிக்கிறது.
கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆகஸ்ட் மாதம் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டது முதல் இப்போது வரை அரசு மருத்துவர்களின் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று இந்த கோரிக்கையை ஆதரித்தார். திமுக ஆட்சியில் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
அதையும் கடந்து அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அரசாணை எண் 354, மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக இருந்த போது தான் பிறப்பிக்கப்பட்டது. அதனால், அதை செயல்படுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பும், கடமையும் இன்றைய திமுக அரசுக்கு இருக்கிறது.
ஆனால், தமிழக சட்டப்பேரவையில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது குறித்து மருத்துவத்துறை அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அரசுக்கு துணை நின்றவர்கள் மருத்துவர்கள்
இந்தியாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி மக்களைக் காப்பதில் அரசுக்கு துணை நின்றவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள். கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளையும், தியாகங்களையும், உயிரிழப்புகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் அவர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகாரமாக இருக்கும். அதற்கு தேசிய மருத்துவர்கள் நாள் சிறந்த நாளாகும்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே, கலைஞர் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 354&ஐ பயன்படுத்தி, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு, அவரது கல்வி தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவர்கள் நாளில் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வாழ்த்து செய்தி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)