"பத்திரப்பதிவு அலுவலகத்தினுள் அனுமதியின்றி வந்தால் ஆவண எழுத்தாளரின் உரிமம் ரத்து செய்யப்படும்" -அமைச்சர் மூர்த்தி
இடைத்தரகர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பத்திரப்பதிவு துறை நெறிமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார்.
இதைதொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் வெளிப்படையாக செயல்படுவதற்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஊழலை தடுக்கவும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆவணம் எழுதுவோர், இடைத்தரகர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பத்திரப்பதிவு துறை நெறிமுறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டு கண்காணிப்பை உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் ஆவணஎழுத்தர், இடைத்தரகர்கள் அமரக்கூடாது இது கண்டறியப்பட்டால் ஆவண எழுத்தரின் உரிமம் ரத்து செய்யப்படும், சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கண்காணிக்க தவறிய சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைமை அலுவலகமான ஐஜி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழலை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக தற்போது 3.0 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவு துறை மேம்படுத்தப்படும்” என்றார்.
இதை தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தவர், கடந்த ஆட்சியில் வீரமணி அமைச்சராக இருந்தபோது, அதிகளவில் ஊழல் நடைபெற்றது. ஆனால் எந்த மண்டலத்திலும் ஆய்வு நடத்தவில்லை, எந்த அலுவலகத்திற்கும் சென்று கண்காணிக்கவில்லை, கடந்த ஆட்சியில் தான் அதிகளவில் போலிபத்திரங்கள் பதிவானது. அதனை கண்டறிந்து, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவு பெற்று அதனை சரிசெய்து தரும்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2000 பேருக்கு சரி செய்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் பத்திரபதிவு அலுவலகத்திற்கு பணம் கொண்டு வர அவசியமில்லை, இணையதளம் மூலமாகவே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்திர பதிவுத்துறையில் ஊழலை தடுக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு பத்திரபதிவு மூலமாக பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு நிலையில் தற்போது 17384 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் திமுக ஆட்சி சாதனை” என பெருமிதம் தெரிவித்தார்.