கரூரில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளில் மளமளவென பரவிய தீ - அச்சத்தில் மக்கள்
வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் உள்ளனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்துள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ பரவி, அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது.
கரூர் - வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயானது, மழை போல் குவிந்துள்ள குப்பை மேட்டில் பரவி அப்பகுதி முழுவதும் அனலைக் கக்கி வருகிறது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கரூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் உள்ளனர். தீ விபத்து காரணமாக கரூர் அரசு காலணி வழியாக வாங்கல் செல்லும் வாகன போக்குவரத்து போலீசார் மூலம் மாற்றி விடப்பட்டுள்ளது.
கரூரில் ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் குப்பை மேட்டை கிளறி தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடிவரும் தீயணைப்பு வீரர்கள் - கடுமையான புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அரசு காலனி பகுதியில் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் இந்த குப்பை மேட்டில் சுமார் 5 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக காற்றின் காரணமாக மளமளவென பற்றிய தீயானது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேலான டேங்கர் லாரிகள் உதவியுடன் தண்ணீரை அடித்து கடுமையாக பற்றி எரியும் தீயை இரவு முழுவதும் போராடி ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு சுமார் 3 மணிக்கு மேல் பாதுகாப்பு காரணங்களுக்காக தீயை அணைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் அதிகாலை 5 மணியிலிருந்து இரண்டு ஹிட்டாச்சி வாகனங்கள் உதவியுடன், குப்பை மேடை கிளறி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கரூர் - வாங்கல் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்தை மாற்றிவிட்ட காவலர்கள், அப்பகுதிக்கு வரவில்லை.வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் புகை மண்டலத்துக்குள் புகுந்து இரண்டு பக்கமும் வெளியே செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.