
அடுத்தடுத்து சிக்கும் திமுக தலைகள்! குறிவைக்கப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்? மகன் கதிர் ஆனந்துக்கு ED சம்மன்!
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ED Summoned: அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது புழல் சிறையில் இருக்கும் அவருக்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை. அதன்பிறகு, அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது.
அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படாமல் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பின், மணல் விற்பனையாளர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு திமுகவை மிரட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட அக்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமலாக்கத்துறை சம்மன்:
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வெவ்வேறு இடங்களில் சுமார் 11.48 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது.
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வற்காக பதுக்கி வைக்கப்பட்டதாக அவரது உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, திமுக எம்.பி. கதிர் ஆனந்த், அவரது உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி (நாளை) அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகினர். இந்நிலையில் தான், கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

