பாஜகவுக்கு எதிராக 27ஆம் தேதி நடைபெறும் போராட்டம்-மக்கள் ஒத்துழைக்க முத்தரசன் வேண்டுகோள்
’’போராட்டம் நடைபெறும் தேதியில் ரயில், பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும் மக்கள் பயணத்தை தள்ளி வைத்து விட்டு எங்களது போராட்டம் முழு வெற்றி அடைய அனைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'’
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 4 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் முத்தரசன், வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி விவசாய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ள நிலையில் ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி போராட்டம் நடைபெறும் தேதியில் ரயில், பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும் மக்கள் பயணத்தை தள்ளி வைத்து விட்டு எங்களது போராட்டம் முழு வெற்றி அடைய அனைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வணிகப் பெருமக்கள் கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தால் மத ரீதியான மோதல்கள் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு மனு தர்மத்தை பின்பற்றி அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் மருத்துவம் படிக்க இயலாத வகையில் செயல்பட்டு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காவிரி ஆற்றின் குறுக்கெ மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். அப்போது, அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அணை கட்டியே தீருவோம் என கூறி வருகின்றனர் ஒன்றிய அரசு நேர்மையான முறையில் தமிழ்நாடு, கர்நாடகம் என பாகுபாடு இல்லாமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு கர்நாடகாவிற்கு ஆதாவாக நடந்து கொண்டால் அது விபரீதமான விளைவுகளை உருவாக்கும் என எச்சரிக்கிறேன் என முத்தரசன் பேசினார்.
அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பாஜ அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வரும் 27ஆம் தேதி நாடு முழு வதும் நடைபெறும் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.